ஆன்மிகம்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பக்தர்கள்.

ராமேசுவரத்தில் மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க அனுமதி கிடைக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-09-30 05:12 GMT   |   Update On 2021-09-30 05:12 GMT
ஒவ்வொரு மாதம் வரும் மாத அமாவாசை அன்று பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கும், தர்ப்பணம் செய்வதற்கும் அரசு தடை விதித்திருந்தது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய 3 நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏறத்தாழ ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை பக்தர்கள் வருகை தருவார்கள்.

இவர்கள் குடும்பத்தில் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் உள்பட பல பூஜைகள் செய்வதற்கு ராமேசுவரத்தில் காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவார்கள். பின்னர் தர்ப்பணம் கொடுப்பது மிகப்பெரிய ஐதீகமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இதனால் இந்த 3 அமாவாசை நாட்களில் மட்டும் ராமேசுவரத்தில் பெரிய திருவிழா கூட்டம் போல் பக்தர்களின் கூட்டம் காட்சியளிக்கும்.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு மார்ச் 24-ம்தேதி முதல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும், பல உலக நாடுகளில் வாட்டி வதைத்த கொரோனா தொற்றுநோய் காரணமாக ராமேசுவரம் உள்பட பல புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் கடலில் நீராடுவதுக்கும் மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருந்தது.

இதனால் கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் பூஜைகள் செய்வதில் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு நினைவாக திதி பூஜைகள் தர்ப்பண பூஜைகள் கொடுப்பதை தவிர்த்து வந்த பக்தர்கள் இந்த மகாளய அமாவாசையில் கொடுப்பது நல்லது என கருதப்படுகிறது.

இதனால் இந்த 3 அமாவாசையில் மகாளய அமாவாசை அன்று பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்ட முன் வருவார்கள்.

ஆனால் ஒவ்வொரு மாதம் வரும் மாத அமாவாசை அன்று பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கும், தர்ப்பணம் செய்வதற்கும் அரசு தடை விதித்திருந்தது.

இதனால் வருகிற 6-ந்தேதி மகாளய அமாவாசை வர உள்ளது. இந்த அமாவாசை அன்று முன்னோர்களுக்கு ராமேசுவரத்தில் தர்ப்பணம் மற்றும் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அரசு அனுமதி அளிக்குமா? என பக்தர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Tags:    

Similar News