உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருச்செந்தூர் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்-வேளாண் உதவி இயக்குனர் தகவல்

Published On 2022-01-11 09:36 GMT   |   Update On 2022-01-11 09:36 GMT
திருச்செந்தூர் வட்டாரத்தில் புயல், வெள்ளம், வறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யுமாறு வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் வட்டாரத்தில் தற்போது நவரை மற்றும் கோடை பருவத்தில் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் சுமார் 2200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும், பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் குறைவிற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு பயிர் காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

2021-22 ஆண்டுக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்கோ டோக்கியோ நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே பிரீமியத் தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பிரீமியம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்ப்புகள் உள்ளன.

நவரை மற்றும் கோடை பருவ நெல் பயிருக்கு 31.01.2022 க்குள் பிரீமியம் செலுத்தினால் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் விதி முறைகளுக்கு ஏற்ப இழப்பீடு பெற வழி உள்ளது. 

விவசாயிகள் பயிர் காப்பீட்டு பிரீமியமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.445 மட்டும் செலுத்த வேண்டும். இது கடன்பெறும் மற்றும் கடன் பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும்.

விவசாயிகள் பிரீமிய கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் செலுத்தலாம். 

இது குறித்து விவசாயிகளிடையே கிராமங்களில் வேளாண்துறை விரிவாக்க அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் திருச்செந்தூர் வட்டார வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News