செய்திகள்
மழை

கேரளாவில் தொடர்ந்து கனமழை- 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

Published On 2021-11-13 08:22 GMT   |   Update On 2021-11-13 09:46 GMT
கேரளாவில் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆழப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து கொட்டிவரும் மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதையடுத்து இன்று (13ந்தேதி) அல்லது நாளை (14ந்தேதி ) இடுக்கியில் உள்ள சிறுதோணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெரியாறு மற்றும் இடுக்கி அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றும், நாளையும் கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆழப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வருவாய் மற்றும் மீட்புப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மற்றொரு தகவலில் கேரளாவில் கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் 12ந்தேதி வரை வழக்கத்தைவிட 86 சதவீதம் அளவு கூடுதல் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News