செய்திகள்
அண்ணாமலை சுவாமி

சென்னை சித்தர்கள்: அண்ணாமலை சுவாமி - கொளத்தூர்

Published On 2021-10-30 12:19 GMT   |   Update On 2021-10-30 12:19 GMT
கடந்த நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த ஆற்றல்மிக்க சித்தர்களில் அண்ணாமலை சுவாமிகளும் ஒருவர் ஆவார்.
சித்தர்கள் பொதுவாக தங்களைப் பற்றி எந்தவொரு தகவலையும் வெளியில் சொல்லவே மாட்டார்கள். தங்களது ஆத்மார்த்தமான சீடர்களிடம் கூட தங்களை பற்றிய பிறப்பு ரகசி யத்தை அவர்கள் வெளியிட்டதே கிடையாது.

இதனால்தான் பெரும்பாலான சித்தர்களின் தோற்றம் பற்றி யாருக்கும் எதுவுமே தெரிவதில்லை. எங்கிருந்து வந்தார்? அவரது பெற்றோர் யார்? எப்படி சித்தராக மாறினார்? எப்படி இந்த ஊருக்கு வந்தார்? அவரது நோக்கம் என்ன? என்பன போன்ற கேள்விக்கு இறுதிவரை விடைகள் கிடைத்ததே இல்லை.

சித்தர் ஆய்வாளர்களும் பழமையான சித்தர்களை ஆய்வு செய்யும்போது அவர்களது நதிமூலம், ரிஷிமூலத்தை பார்க்க முயற்சி செய்ய மாட்டார்கள். அப்படியே ஆய்வுகளில் முயற்சி செய்தாலும், வெற்றி என்பது கிடைக்கவே கிடைக்காது-.

சீரடி சாய்பாபாவின் பூர்வீகத்தை தெரிந்துகொள்ள எத்தனையோ நிபுணர்கள், எத்தனையோ வழிகளில் ஆராய்ச்சி களில் ஈடுபட்டனர். இன்றும்கூட அந்த ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது-. ஆனால் உண்மையான தகவலை  ஒரு நிபுணரால் கூட, ஒரு இஞ்ச் அளவுகூட சொல்ல முடியவில்லை.

இப்படி தமிழகத்திலும் எத்தனையோ சித்தப் புருஷர்கள் வாழ்ந்துள்ளனர். எங்கிருந்து எப்படி வந்தார்கள் என்பது தெரியாத நிலையில் அவர்களது ஜீவசமாதி வழிபாடு மட்டும் மிக சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு உதாரணமாக சென்னை கொளத்தூரில் உள்ள அண்ணாமலை சுவாமிகள் சித்தரை சொல்லலாம்.

கடந்த நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த ஆற்றல்மிக்க சித்தர்களில் அண்ணாமலை சுவாமிகளும் ஒருவர் ஆவார். இவரை திருவண்ணாமலையில் அவதரித்த சித்தர் என்று பலரும் தங்களது நூல்களில் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் அவர் திருவண்ணாமலையில் தான் அவதரித்தார் என்பதற்கு இதுவரை சான்றுகள் இல்லை.

அவர் தன்னை சுற்றியுள்ள மக்களிடம் பேசும்போதெல்லாம் அண்ணாமலை பார்த்துக்கொள்வார் என்று பேசுவார். பேச்சை தொடங்கும்போதும், முடிக்கும்போதும் அண்ணாமலையார் என்றே சொல்வார். இதனால் அவரது பெயரும் அண்ணாமலை சுவாமிகள் என்று ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏதோ ஒரு நகரில் இருந்து புறப்பட்ட அவர் சென்னை வழியாக காளஹஸ்தி சிவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொளத்தூர் பகுதி வழியாக அவர் நடந்து கொண்டிருந்தபோது அங்குள்ள பழைய லட்சுமிபுரம் பகுதி அவரது மனதை மிகவும் கொள்ளை கொண்டது.

அதற்கு காரணம் கொளத்தூர் சுற்றுவட்டாரம் அந்த காலத்தில் மிகப்பெரிய வனப்பகுதியாக இருந்தது. ஆங்காங்கே நீர் நிலைகள் இருந்தன. கண்ணுக்கு குளிர்ச்சியாக எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென்ற காட்சியுடன் கொளத்தூர் அமைந்திருந்தது.

அந்த வனப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மிகப்பெரிய பூந்தோட்டமும் இயற்கையாகவே அமைந்திருந்தது-. நீர்நிலைகளால் செல்வ செழிப்புடன் காணப்பட்ட அந்த இடம் மிகவும் அமைதியாகவும் இருந்தது.

பொதுவாக சித்தர்களுக்கு இத்தகைய இடங்களை கண்டால் மிகவும் பிடித்து போய் விடும். தங்களது தவத்துக்கும், தியானத்துக்கும் எந்த இடையூறும் இல்லாமல் அமைதியாக சிவ சிந்தனையுடன் இருக்க முடியும் என்று அத்தகைய இடங்களை தேடிப் பிடித்து போய் அமர்ந்து விடுவார்கள்.

அப்படிப்பட்ட கொளத்தூர் பகுதியை பார்த்துக்கொண்டே அண்ணாமலை சுவாமிகள் காளஹஸ்தி சிவாலயத்திற்கு சென்றார். அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து ஈசனை வழிபட்டார். அங்குள்ள மலைப் பகுதியில் ஆழ்ந்த தியானத்திலும் ஈடுபட்டார்.

பிறகு சில மாதங்கள் கழித்து காளஹஸ்தியில் இருந்து புறப்பட்டார். வரும் வழியில் உள்ள சிவாலயங்களை தரிசித்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தார். சென்னையின் எல்லையில் உள்ள கொளத்தூர் பகுதிக்கு வந்தபோது அவரது மனம் மீண்டும் அங்குள்ள வனப்பகுதியின் அமைதி மீது திரும்பியது.

தியானத்துக்கு ஏற்ற இடமாக இருந்ததால், கொளத்தூர் வனப்பகுதியிலேயே வாழ்நாள் முழுவதும் இருந்துவிட அண்ணாமலை சுவாமிகள் முடிவு செய்தார். அதன்படி அங்கு ஒரு குடில் அமைத்துக்கொண்டு தங்கிவிட்டார்.

சித்தர் ஒருவர் கொளத்தூர் வனப்பகுதிக்குள் தங்கி இருக்கும் தகவல் சென்னையில் உள்ள ஆன்மீக மக்களுக்கு தெரிய வந்தது. எனவே அவர்கள் கொளத்தூருக்கு சென்று அண்ணாமலை சுவாமிகளை சந்தித்து ஆசி பெற ஆரம்பித்தனர். அவர்களிடம் இருந்து பிரதி பலனாக அண்ணாமலை சுவாமிகள் எந்த வொரு சிறு பொருளையும் பெற விரும்பவில்லை.

அண்ணாமலை சுவாமிகளுக்கு நிறைய பொன், பணம் கொடுக்க எத்தனையோ பக்தர்கள் முன்வந்தனர். ஆனால் அத்தகைய நபர்களை சுவாமிகள் தனது அருகிலேயே சேர்த்துக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் சுவாமிகள் தனக்கென்று பெரிய மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. பொன், பொருளை கையால் தொட்டதில்லை. எவரிடமும் யாசகம் கேட்டதில்லை.

ஒவ்வொரு நாளும் தன்னை தேடி வருபவர்களுக்கு வேற்றுமை இல்லாமல் ஆசி வழங்கினார். சாதி, சமயம், இனம் கடந்து அவர் தன்னை நாடி வந்தவர்களிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டார். இந்த உலகில் எல்லா உயிர்களும் ஒன்றேதான். அன்புதான் பிரதானம் என்பதை ஒவ்வொருவரிடமும் வலியுறுத்தி கூறினார்.

பெரும்பாலும் சித்தர்கள் தங்களது குடில் பகுதியில் ஏதாவது ஒரு சக்தியின் பீடத்தை அமைத்து வழிபாடுகள் மேற்கொள்வார்கள். பாலா சக்தி வழிபாடுதான் சித்தர்களுக்கு பிரதான வழிபாடாக இருக்கும். ஏனெனில் சித்தர்களுக்கு உரிய ஆற்றல்களை கொடுப்பவள் பாலாதான்.

சித்தர்கள் நடத்தும் அற்புதங்களுக்கு அடிப்படையாக இருப்பது அந்த சக்திதான். ஆனால் அண்ணாமலை சித்தர் சக்தி வழிபாட்டைவிட சிவபெருமான் மீது அதிக பற்றுதல் கொண்டிருந்தார். அதன் காரணமாக கொளத்தூரில் அவர் குடில் அமைத்த பகுதியிலேயே லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார்.

அங்குள்ள வில்வ மரத்தின் அடியில் அந்த லிங்கம் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது-. காலை, மாலை  இரு வேளையும் உரிய விதிகள்படி சுவாமிகள் இங்கு பூஜையை மேற்கொண்டார். அவர் பூஜை நடத்தும் சமயங்களில் பக்தர்களும் கலந்துகொள்வது உண்டு. இப்படி அண்ணாமலை சுவாமிகளின் புகழ் சென்னை மக்களிடம் பரவி இருந்தது.

ஆன்மீகவாதிகள் மட்டுமின்றி சித்தர் நிலையில் இருந்தவர்களும் கூட அண்ணாமலை சுவாமிகளை தேடி வந்து அருள் பெற்ற சம்பவங்கள் நடந்தது உண்டு. ஒரு தடவை அண்ணாமலை சுவாமிகள் பற்றி கேள்விப்பட்ட காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் அங்கிருந்து கொளத்தூருக்கு நடந்தே வந்துவிட்டார்.

கொளத்தூரில் அண்ணாமலை சுவாமிகளின் மடத்தில் 2 நாட்கள் தங்கினார். ஆனால் கண்ணப்ப சுவாமிகளும், அண்ணாமலை சுவாமிகளும் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. மவுனத்தாலே அவர்கள் தங்களது ஆன்மீக கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அதிசயம் அப்போது நடந்தது.

ஒரு காலகட்டத்துக்கு பிறகு அண்ணாமலை சுவாமிகளை தேடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன்தான் வந்தனர். அவர்களுக்கு அண்ணாமலை சுவாமிகள் தற்காலிக உதவிகள் செய்தாரே தவிர, நிரந்தரமான உதவிகள் எதையும் செய்யவில்லை.

சிலர் உண்மையிலேயே வறுமையை போக்கிக்கொள்ள அண்ணாமலை சுவாமிகளை நாடியதுண்டு. அவர்களை பார்த்து அண்ணாமலை சுவாமிகள் புன்னகை செய்வார். அந்த ஒரு புன்னகையே அந்த ஏழைகளின் தோஷங்கள் அனைத்தையும் போக்க செய்யும் வகையில் இருந்தது.

இப்படி ஏராளமானவர்கள் அண்ணாமலை சுவாமிகளை சந்தித்து தங்களது வறுமையில் இருந்து விடுபட்டு உள்ளனர். அதேபோன்று பலர் நோய் கொடுமையில் இருந்து மீள்வதற்காகவும் அண்ணாமலை சுவாமிகளை சந்தித்தனர். அவர்களுக்கு அண்ணாமலை சுவாமிகள் ஆசி செய்யும் விதம் வித்தியாசமாகும்.  

யார் நோயில் இருக்கிறாரோ அவருக்கு தனது கைப்பட விபூதிகளை எடுத்து பிரசாதமாக அண்ணாமலை சுவாமிகள் கொடுப்பார். அந்த விபூதி பிரசாதம் அருமருந்தாக வேலை செய்தது. அப்படி விபூதி பிரசாதம் பெற்றவர்கள் மீண்டும் வாழ்நாள் முழுக்க அத்தகைய நோய்கள் திரும்ப வராமல் சுபிட்சமாக வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை சுவாமிகளை நாடி வந்த பக்தர்களில் காவடி சுவாமி, கோட்டை கட்டி சுவாமி என்ற 2 பேர் சீடர்களாக மாறினார்கள். அவர்கள் இருவரிடமும் குறிப்பிட்ட காலத்தில்  என்னை பற்றி உங்களுக்கு தெரியவரும். அன்னைய தினம் தவறாமல் இங்கு வந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

இந்த சம்பவம் நடந்த சில மாதங்கள் கழித்து 1965-ம் ஆண்டு தனது ஆத்மாவை பிரித்து கொள்ள அண்ணாமலை சுவாமிகள் முடிவு செய்தார். அதன்படி அந்த ஆண்டு ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி, திரிவோணம் நட்சத்திரம் தினத்தன்று அண்ணாமலை சுவாமிகள் சிவனுடன் இரண்டற கலந்தார்.

அவர் முக்தியடைந்த நிகழ்வு அவரது இரு சீடர்களுக்கும் அசரீரி மூலம் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கொளத்தூருக்கு வந்து அண்ணாமலை சுவாமிகளை அவர் வாழ்ந்த பகுதியிலேயே ஜீவசமாதி செய்தனர். சில ஆண்டுகள் வரை அந்த ஜீவசமாதியில் நல்ல முறையில் வழிபாடுகள் நடைபெற்று வந்தது.

கால ஓட்டத்தில் அந்த வழிபாடுகள் நின்றுபோய் அண்ணாமலை சுவாமிகளை அனைவரும் மறந்தே போய்விட்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை சுவாமிகள் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

அன்றுமுதல் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் அண்ணாமலை சுவாமிகள் ஜீவசமாதியில் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது-. இந்த ஆண்டு 56-வது குருபூஜை நடைபெற உள்ளது.  வாய்ப்பு இருப்பவர்கள் கொளத்தூர் லட்சுமிபுரம் குமரன் தெருவில் உள்ள அண்ணாமலை சாமியார் மடத்திற்கு சென்றால் சித்தரின் அருளை பெற்று புத்துணர்ச்சி பொங்க திரும்பி வரலாம்.
Tags:    

Similar News