ஆன்மிகம்
மச்சபுரீஸ்வரர் கோவில்

முதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய மச்சபுரீஸ்வரர் கோவில் -கும்பகோணம்

Published On 2020-11-04 01:24 GMT   |   Update On 2020-11-04 01:24 GMT
தசாவதாரம் என்று சொல்லப்படுவதில் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய ஆலயமாக, கும்பகோணம் அருகே உள்ள தேவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில் திகழ்கிறது.
மகாவிஷ்ணு எடுத்த முக்கியமான 10 அவதாரங்களில் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் ஆகியோருக்கே அதிகமான வழிபாடுகள் நடைபெறுகின்றன. தசாவதாரம் என்று சொல்லப்படுவதில் முதல் அவதாரமான ‘மச்ச அவதாரம்’ என்பது பெரிய அளவில் ஆலய வழிபாட்டில் இல்லை. ‘மச்சம்’ என்றால் ‘மீன்’ என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது. இந்த அவதாரத்தோடு தொடர்புடைய ஆலயமாக, கும்பகோணம் அருகே உள்ள தேவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்தக் கோவிலின் மூலவர் பெயர் ‘மச்சபுரீஸ்வரர்’ என்பதாகும். இறைவியின் திருநாமம் ‘சுகந்த குந்தலாம்பிகை.’ மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, சுய உருவத்தை அடைய இங்குள்ள இறைவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

தல வரலாறு

ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மதேவன், நித்திரையில் ஆழ்ந்துவிட்டார். அப்போது ஒரு அசுரன், படைப்புத் தொழிலுக்கு ஆதாரமான வேதங்களை திருடிச் சென்று விட்டான். இதனால் உலக படைப்பு நின்று போனது. பிரம்மன் செய்வதறியாது திகைத்தார். அவருக்கு உதவ மகாவிஷ்ணு முடிவு செய்தார். அதன்படி அவர் சிறிய மீன் வடிவம் எடுத்து ஒரு ஆற்றில் தங்கியிருந்தார்.

அந்த காலகட்டத்தில், மகாவிஷ்ணுவை நோக்கி சத்யவிரதன் என்ற மன்னன் நீரையே உணவாக கொண்டு கடும் தவம் செய்து வந்தான். அவன் ஒருநாள், தன்னுடைய தினசரி கடமைகளைச் செய்து, ஆற்றில் நீராடினான். அப்போது தன் இரு கௌாலும் ஆற்றில் இருந்து நீரை அள்ளினான். என்ன அதிசயம்.. அவன் கையில் இருந்த நீரில் ஒரு சிறிய மீன் குஞ்சு வந்தது.

அந்த மீன் அவனிடம் பேசவும் செய்தது. “மன்னா.. என்னை மீண்டும் நீரில் விட்டுவிடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்” என்றது.

மீன் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மீனை தன் கமண்டலத்தில் போட்டுக்கொண்டு அரண்மனை நோக்கி புறப்பட்டான். அங்கு சென்றதும் கமண்டலத்தில் கிடந்த அந்த சின்னஞ்சிறிய மீன், கமண்டலம் அளவுக்கு வளர்ந்து விட்டது. எனவே அந்த மீனை எடுத்து அங்கிருந்த பெரிய பாத்திரத்தில் விட்டான். என்ன ஆச்சரியம், சற்று நேரத்தில் அந்த பாத்திரம் அளவுக்கு அந்த மீன் வளர்ச்சியடைந்தது. இதையடுத்து மன்னன், அந்த மீனை அரண்மனையில் இருந்த நீராடும் குளத்தில் விட்டான். சற்று நேரத்தில் அந்த குளத்தை அடைத்தபடி வளர்ந்துவிட்டது அந்த மீன்.

எனவே மீனை எடுத்துச் சென்று, ஊர் குளத்தில் விட்டான். சிறிது நேரத்தில் குளம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. இறுதியில் படைவீரர்கள் உதவியுடன் மீனை தூக்கிக் கொண்டு போய் கடலில் விட்டான். மீன் கடலளவு வளர்ந்து பிரமாண்டமாய் நின்றது. இதைக் கண்ட மன்னன், தான் வழிபடும் திருமாலே இதுபோன்ற திருவிளையாடலை நடத்துவதாக அறிந்துகொண்டான்.

உடனே, “பரந்தாமா.. தாங்கள் இந்த உருவம் பெற்றதற்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?” என்று கேட்டான்.

அப்போது மீன் வடிவில் இருந்த மகாவிஷ்ணு, “மன்னா.. வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது. அந்த சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் ஒரு ஜோடியை ஏற்றிவிடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். நான் தற்போது இருக்கும் மச்ச அவதாரத்திலேயே, படகை சுமந்து அது கவிழ்ந்து விடாதவாறு காப்பாற்றுவேன். அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

மகாவிஷ்ணு கூறியபடி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களை காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக்கொண்டு சென்றான். பலத்த காற்றால் படகு தடுமாறியது. அப்போது மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றி படகை சுமந்து சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு, அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். மகாவிஷ்ணு, மன்னனுக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பின்னர் பரந்தாமன் வேகமாக வெள்ளத்தினுள் சென்று, அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

இப்படி மகாவிஷ்ணு மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது மச்சபுரீஸ்வரர் திருக்கோவில். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

மச்சபுரீஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தலம் என்பதால், கல்வி கற்று வரும் மாணவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.

அமைவிடம்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்சபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.
Tags:    

Similar News