தமிழ்நாடு
கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை- பள்ளி தலைமை ஆசிரியர் கைது

Published On 2022-01-07 06:25 GMT   |   Update On 2022-01-07 06:25 GMT
கேரளாவில் பதுங்கி இருந்த தலைமை ஆசிரியரை கைது செய்த தனிப்படை போலீசார், திசையன்விளைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு பஜாரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளிகூடத்தில் தலைமை ஆசிரியராக நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளம் மெயின் ரோட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெபக்குமார் (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-1 வகுப்பிற்கு பாடம் எடுக்க சென்றார். அப்போது அந்த வகுப்பறையில் ஒரு மாணவிக்கு தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதை அறிந்த தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தலைமை ஆசிரியரை வலைவீசி தேடி வந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. தப்பி ஓடிய தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே தலைமறைவான தலைமை ஆசிரியரின் செல்போன் எண் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அதில் கிடைத்த தகவலின்பேரில் கேரளாவில் பதுங்கி இருந்த தலைமை ஆசிரியரை இன்று அதிகாலை கைது செய்தனர்.

பின்னர் அவரை திசையன்விளைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News