செய்திகள்

குட்கா ஊழல் - 2 போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை

Published On 2019-02-12 07:47 GMT   |   Update On 2019-02-12 07:47 GMT
குட்கா ஊழல் தொடர்பாக 2 போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #GutkaScam #CBI
சென்னை:

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்குன்றம் அருகே செயல்பட்டு வந்த குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் அதிகாரிகளின் பக்கம் சி.பி.ஐ.யின் கவனம் திரும்பியது.

இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் போலீஸ் அதிகாரிகள் பட்டியலை சேகரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

புழல் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

குட்கா ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் சென்னையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அனைவரும் சி.பி.ஐ. பிடியில் சிக்கினர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பணியாற்றி வரும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் வெளி மாவட்டத்தில் உள்ள டி.ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணை ஒரே நாளில் நடத்தப்படவில்லை. 3 பேரையும் தனித்தனி நாட்களில் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது 3 அதிகாரிகளும் அளித்த தகவல்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட 2 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது. சென்னை திருமங்கலத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.

இப்போது பணியில் இருக்கும் டி.ஜி.பி. ஒருவரும், டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஒருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இவர்கள் இருவருக்கும் கீழே பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே குட்கா முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் சென்னையில் பணியாற்றிய மேலும் 3 அதிகாரிகளிடமும் விரைவில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற உள்ளது.

ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியும், டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

குட்கா விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும் யாரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #GutkaScam #CBI

Tags:    

Similar News