செய்திகள்
ஜி.கே.வாசன்

சசிகலா விடுதலையால் அதிமுக வெற்றி பாதிக்காது - ஜி.கே.வாசன் பேட்டி

Published On 2021-01-27 08:00 GMT   |   Update On 2021-01-27 08:00 GMT
சசிகலா விடுதலையால் அ.தி.மு.க வெற்றி பாதிக்காது. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

ஈரோடு, ஜன. 27-

ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

வேளாண் சட்டங்கள் குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசு நடத்தி இருக்கிறது. விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் ஒத்தகருத்து வரவில்லை. வேளாண் சட்டங்களை கொண்டு வந்த நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சியையும் உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

துரதிஷ்டவசமாக ஒரு சில மாநில விவசாயிகளின் போராட்டம் காரணமாக, தவறாக அவர்கள் வழிநடத்தப்படுவதன் காரணமாக இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டி ருக்கிறது. விவசாயிகளின் சந்தேகம் போகவில்லை. குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கு பெற்று இருக்கிறார்கள். இதற்கு ஒத்த கருத்து தேவை.

இருதரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தை அடிப்படையில் தான் முடிவு ஏற்பட வேண்டும். உண்மை நிலைக்கு ஏற்றவாறு செயல்பட தவறக்கூடாது. அவர்களும் இந்திய விவசாயிகள் தான். அனைவரின் மீதும் அக்கறை கொண்டவர்களாக மத்திய அரசு செயல்பட வேண்டும். குளிரிலும், மழையிலும் விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராடி வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. அதன்படி பேச்சு நடத்தி ஒத்த கருத்து உருவாகும் என எதிர்பார்த்த சூழலில், குடியரசு தினத்தில் துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. அப்பாவி விவசாயிகளுடன் சமூக விரோத கும்பல் புகுந்து குடியரசு தினத்தில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், பிரச்சனை தொடர, அதில் குளிர்காயவும் அந்த கும்பல் விவசாயிகளை வழி நடத்துகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்தகட்டமாக மனு வாங்கும் திட்டத்தை தி.மு.க அறிவித்துள்ளது. வாக்காளர்கள் குழம்பி போய் உள்ளனர். எதிர்கட்சி வாக்கு வங்கிக்காக செயல் படுகிறார்கள். தேர்தலுக்கு 3 மாதமே இருக்கும் நிலையில் இது போன்ற அறிவிப்பு ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. எதிர்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். நாடக அரசியல் செய்ய கூடாது.

ஈரோட்டில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தரத்திற்குரிய மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய வேண்டும். ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். அதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவு கொரோனா பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் யாராக இருந்தாலும் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.


சசிகலா விடுதலையால் அ.தி.மு.க வெற்றி பாதிக்காது. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. ராகுல் காந்தி கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்தார். அவர் கண்மூடித்தனமாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். யார் பிரச்சாரம் செய்ய வந்தாலும் மக்கள் கூட்டம் கூடத்தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News