ஆன்மிகம்
சூலூர் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை படத்தில் காணலாம்.

சூலூர் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது

Published On 2021-03-31 05:58 GMT   |   Update On 2021-03-31 05:58 GMT
சூலூர் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதை உ.வே செந்தாமரைகண்ணன் சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.
கோவையை அடுத்த சூலூர் திருச்சி ரோடு கண்ணம்பாளையம் ஆர்.வி. எஸ். கல்வி வளாகத்தில் சூலூர் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இங்கு திருமால், பூதேவி ஸ்ரீதேவி மற்றும் மகாசரஸ்வதி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் போன்ற தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அவற்றில் புதிய உருவத் திருமேனிகள் செய்து, தற்போது பத்மாவதி தாயாருக்கு புதிய சன்னதியும், ஆழ்வார்கள், ஆச்சாரியார்களுக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தின் 2-வது கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த 28-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது. 29-ந் தேதி காப்பு கட்டுதல், சிறப்பு அர்ச்சனையுடன், முதல் கால வேள்வி பூஜை நடைபெற்றது.

நேற்று காலை சுப்ரபாதம், 9 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜை, மாலை 3 மணிக்கு 108 கலச அபிஷேகம், மாலை 5 மணியளவில் 3-ம் கால வேள்வி பூஜை ஆகியவை நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால வேள்வி, 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதை உ.வே செந்தாமரைகண்ணன் சுவாமிகள் நடத்தி வைக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், பழனி சாது சாமி திருமடம் சாது சண்முக அடிகளார், வேலூர் கலவை சச்சிதானந்த சுவாமிகள், கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், வேலூர் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அருளாசி வழங்குகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை ஆர்.வி.எஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் கே.வி.குப்புசாமி தலைமையில் குழுவினர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News