ஆன்மிகம்
அய்யப்ப சுவாமியின் தங்க அங்கி, வாளையும், கருப்பசாமியின் வெள்ளி அங்கியையும் படத்தில் காணலாம்.

அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு

Published On 2019-12-17 06:04 GMT   |   Update On 2019-12-17 06:04 GMT
அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் கேரள மாநிலத்தில் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மஹோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.

விழா நாட்களில் அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்களுடன் ஒரு தங்க வாளும் உண்டு. இந்த ஆபரண பெட்டி நேற்று காலை கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் எடுக்கப்பட்டு, அங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. அந்த பெட்டியில் அய்யப்பனுக்கு தங்க அங்கியும், கருப்ப சுவாமிக்கு வெள்ளி அங்கியும், தங்க வாளும் இருந்தது. இவற்றை பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இந்த தங்க வாளை சுவாமி அய்யப்பன் உபயோகித்ததாகவும், இடத்திற்கு இடம் இந்த வாள் எடை வேறுபடும் என்றும் நம்பப்படுகிறது.

நேற்று காலை புனலூரில் இருந்து செண்டை மேளம் முழங்க பட்டத்து யானை முன்னால் வர பக்தர்கள் ஊர்வலமாக வேனில் ஆபரண பெட்டி புறப்பட்டது. கேரள மாநில போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் தென்மலை, ஆரியங்காவு வழியாக தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு மதியம் 2 மணிக்கு ஆபரண பெட்டி வந்து சேர்ந்தது.



கோவில் முன்பு ஆபரண பெட்டி வைத்திருந்த வேன் நிறுத்தப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிர் வேட்டு மற்றும் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையாக ஆபரண பெட்டியை தரிசனம் செய்தனர்.

மாலை 3.15 மணிக்கு ஆபரண பெட்டி தென்காசியில் இருந்து புறப்பட்டு பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு மாலையில் சென்றடைந்தது. அங்கு பெண் குழந்தைகள் கைகளில் விளக்கு ஏந்தி ஆபரண பெட்டிக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் ஆபரண பெட்டி வைக்கப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெறுகிறது. 3-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை சப்பர வீதிஉலா மற்றும் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் நாளான வருகிற 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 26-ந் தேதி ஆராட்டு நடக்கிறது.

முன்னதாக செங்கோட்டையில் பஸ் நிலையம் முன்பு அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவில் முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் ஆபரண பெட்டிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆபரண பெட்டியை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News