செய்திகள்
அணு ஆயுதம் மற்றும் விபத்து நடந்த பகுதி

அணு ஆயுத பரிசோதனையில் உயிரிழந்த விஞ்ஞானிகள் குடும்பத்தினருக்கு விருது வழங்கினார் புதின்

Published On 2019-11-22 17:16 GMT   |   Update On 2019-11-22 17:16 GMT
ரஷியாவில் கற்பனையிலும் எட்டாத ஆற்றல் கொண்ட அணு ஏவுகணை பரிசோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கு அதிபர் புதின் விருது வழங்கி கௌரவித்தார்.
மாஸ்கோ: 

அணு ஆயுத பலத்தில் உலக நாடுகளில் முதன்மையாக விளங்குவது ரஷியா. தனது அணு ஆயுதங்களை பலப்படுத்த பல்வேறு சோதனைகளை செய்துவரும் ரஷியா, உலகின் எந்த மூலைக்கும் அல்லது எல்லையற்ற தூரம் பயணிக்கும் தன்மை கொண்ட அணு ஏவுகணையை உருவாக்க முயற்சித்து வருகிறது. 

இந்த அணு ஏவுகணை வேறு எந்த நாடுகளாலும் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ரஷியா மீது எந்த நாடு அணு ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தினால் உடனடியாக அந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த அணு ஏவுகணையை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
 
இதற்கிடையில், அந்நாட்டின் வடமேற்கில் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியை ஒட்டியுள்ள வெள்ளை கடலின் அருகாமையில் நியோனோக்ஸா அணு பரிசோதனை மையத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இந்த ஏவுகணையின் என்ஜின் பரிசோதனை நடைபெற்றது.



அப்போது திடீரென ஏவுகணையின் என்ஜின் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்ட 5 விஞ்ஞானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 

அணு ஆயுத மையத்தில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் அணு கதிர்வீச்சு வேகமாக பரவியது. இதையடுத்து, கதிர்வீச்சு பரவிய இடங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு கதிர்வீச்சை கட்டுப்படுத்த ரஷிய அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், அணு ஏவுகணை பரிசோதனையின்போது உயிரிழந்த விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கு இன்று ரஷிய அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உயிரிழந்த விஞ்ஞானிகளின் மனைவிகளிடம் அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார்.

அதன்பின் விஞ்ஞானிகளின் மனைவிகளிடம் பேசிய அதிபர் புதின், 'இவரகள் அனைவரும் ரஷியாவை பாதுகாக்க சிறப்பு பணியை அவர்களாகவே தேர்ந்தெடுத்தனர்.

ரஷிய எல்லைகளை பாதுகாக்க உலகில் உள்ள எந்த ஆயுதத்திற்கு நிகர் இல்லாத இந்த புதிய ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News