ஆன்மிகம்
ராமேசுவரம் கோவில்

மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் பகல், இரவு முழுவதும் நடை திறப்பு

Published On 2021-03-09 03:04 GMT   |   Update On 2021-03-09 03:04 GMT
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் 11-ந்தேதி (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியன்று பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 5-வது நாளான நேற்று இரவு சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உடன் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் ஆறாவது நாளான இன்று இரவு 8 மணிக்கு மேல் சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-வது நாளான நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி அன்று இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் வைக்கப்பட்ட மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளித்தேரோட்டம் நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் மற்றும் இரவு முழுவதும் திறக்கப்பட்டு மறுநாள் 12-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12-ந் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. சிவராத்திரி மற்றும் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பொறுப்பு தனபால் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், செல்லம், காசாளர் ராமநாதன் மற்றும்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News