செய்திகள்
பிரதமர் மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா

மக்களை வறுமையை நோக்கி அழைத்து செல்வதில் வரலாறு படைக்கிறது பாஜக அரசு: பிரியங்கா காந்தி

Published On 2019-11-15 16:51 GMT   |   Update On 2019-11-15 16:51 GMT
மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை வறுமையை நோக்கி அழைத்து செல்வதில் வரலாறு படைத்துக்கொண்டிருப்பதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் மக்களின்  நுகர்வு மற்றும் செலவு கணக்கெடுப்பு ஆண்டு தோறும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 2017-18 ஆம் ஆண்டுக்கான நுகர்வு மற்றும் செலவு கணக்கெடுப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. 

அதன்படி, நாட்டில் நுகர்வுக்காக மக்கள் செலவிடும் அளவு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக குறைந்துள்ளது. 



இந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதியே இந்த அறிக்கையை வெளியிட தேசிய புள்ளியியல் அலுவலகம் அனுமதி அளித்தபோதும் மிகவும் பாதகமாக கணக்கெடுப்பின் முடிவுகள்,  சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ள சூழ்நிலை ஆகிய காரணங்களால் மத்திய அரசு இந்த முடிவுகளை வெளியிடாமல் காலம் கடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், நுகர்வு மற்றும் செலவு தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், உத்தரபிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியாவது:-

நாட்டு மக்கள் நுகர்வுக்காக செலவிடும் பணத்தின் அளவு முற்றிலும் சரிந்து விட்டது. இதுவரை இருந்த அரசாங்கங்கள் வறுமையை ஒழித்து மக்களை முன்னேற்ற அயராது பாடுபட்டுக்கொண்டிருந்தது. 

ஆனால், தற்போது ஆளும் பாஜக அரசு மக்களை வறுமையை நோக்கி அழைத்து செல்வதில் வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது. 



பாஜகவின் தவறான பொருளாதார கொள்கைகளால் கிராமப்புற இந்தியா மோசமான விளைவுகளை சந்தித்துவரும் அதே நாளில் பாஜக தங்கள் நண்பர்களான தனியார் பெருமுதலாளிகள் மேலும் பணக்காரர்களாக உறுதுணையாக இருக்கிறது.  

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News