செய்திகள்
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ஓ.பன்னீர்செல்வம் கருத்தில் தவறு எதுவும் இல்லை- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2021-10-28 09:09 GMT   |   Update On 2021-10-28 09:56 GMT
சசிகலா தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தில் தவறு எதுவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்க கவசம் அனுப்புவதற்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 25-ந்தேதி மதுரை வந்தார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து அ.தி.மு.க.வில் தொடர் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிகரித்துள்ள நிலையில் மதுரையில் வருகிற 30-ந்தேதி
அ.தி.மு.க.
சார்பில் தேவர் ஜெயந்தி விழாவுக்கு நேரம் ஒதுக்கித்தர முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகரை சந்தித்து மனு அளித்தார்.

தேவர் திருமகனின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 30-ந்தேதி வெகுவிமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். மக்களால் போற்றப்படும் மாபெரும் தலைவர் தேவர் திருமகனின் விழாவில் அ.தி.மு.க.வினர் ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்தோடு கலந்து கொள்வார்கள். தேவர் திருமகனுக்கு பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அணிவிப்பதற்காக 13½ கிலோ எடையுள்ள தங்க கவசத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அந்த தங்க கவசம் ஒவ்வொரு ஜெயந்தி விழாவின்போதும் அணிவிக்கப்பட்டு தேவர் திருமகனுக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் காலை 7 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலையிலும், 11 மணிக்கு பசும்பொன் தேவர் நினைவிடத்திலும் அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம்.



இந்த முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதால் எங்களுக்கு காலையில் நேரம் ஒதுக்குவது குறித்து அதிகாரிகள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்கள் நிறைந்த ஜனநாயக இயக்கம். பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும் என்பார்கள். அதுபோல நாங்கள் இப்போது எதிர் கட்சியாக இருந்தாலும் எங்கள் கட்சிக்குள் என்ன நடக்கிறது? என்பதை கூர்ந்து கவனிப்பதையே ஊடகங்கள் வேலையாக கொண்டுள்ளன. ஆளும் கட்சியின் குறைகளை சுட்டிக்காட்ட மறந்து விட்டார்கள்.

சசிகலா விவகாரத்தில் அ.தி.மு.க.வில் எந்த சர்ச்சையும் தற்போது கிடையாது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு பிறகு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எந்த விதமான கருத்துக்களையும் சொல்லவில்லை.

எனவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சசிகலாவை சேர்ப்பது குறித்து அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தை தான் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது? கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து, நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் கட்சி வலுவோடும், ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள் கூடி ஆலோசனை செய்வோம் என்றுதான் ஓ.பன்னீர்செல்வம் சொன்னார்.

அது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால் சில அ.தி.மு.க. நிர்வாகிகளும் அதற்கு எதிர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News