அழகுக் குறிப்புகள்
தனித்துவமான தாய்லாந்து மசாஜ்

தனித்துவமான தாய்லாந்து மசாஜ்

Published On 2022-01-08 08:12 GMT   |   Update On 2022-01-08 08:12 GMT
உலகப் புகழ்பெற்ற மசாஜ் வகைகளில் குறிப்பிடத்தக்கது தாய் மசாஜ். சமீபத்தில் இதற்கு உலக பாரம்பரிய மசாஜ் வகை என்ற சிறப்பு அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது மசாஜ். உலகப் புகழ்பெற்ற மசாஜ் வகைகளில் குறிப்பிடத்தக்கது தாய்லாந்து மசாஜ். இது சுருக்கமாக ‘தாய் மசாஜ்’ என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இதற்கு உலக பாரம்பரிய மசாஜ் வகை என்ற சிறப்பு அந்தஸ்து கிடைத்திருக்கிறது. தனித்துவமான தாய்லாந்து மசாஜ் பெருமைகள் இதோ...

மன அழுத்தம் மறைகிறது

மனதுக்கு தேவையற்ற அழுத்தமே, மன அழுத்தமாக பரிணமிக்கிறது. பொதுவான இயக்கத்திற்கு நமக்கு அழுத்தம் தேவை. ஆனால் அதுவே தேவையற்றவகையில் பெருகி மனஅழுத்தமாகி சோர்வடையவும், தடுமாறவும் வைத்து தோல்வியை நோக்கி கொண்டு செல்கிறது. தாய் மசாஜ் முறையில் கிடைக்கும் மென்மையான அழுத்தங்கள், நீட்சி நுட்பங்கள் உடலை தளர்வுபடுத்துகிறது. அதிகப்படியான மன அழுத்தங்களை வெளியேற்றுகிறது. இது ஆய்வுகள் மூலம் விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மன அழுத்தம் போலவே தலைவலி, உடல்வலி ஆகியவற்றிலிருந்தும் தாய் மசாஜ் விடுதலையளிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் புத்துணர்ச்சி பெறுவதால் ரத்த ஓட்டம் வேகம் பெற்று, உடல் இயக்கமும் சீராகிறது.


நீவுதல்.. நீட்டுதல்..

பெரும்பாலான மசாஜ் முறைகளில் மூலிகை எண்ணெய் தேய்த்து, கைகால்களை அமுக்கிவிடுவது மட்டுமே நிகழ்கிறது. ஆனால் “தாய் மசாஜ்” கைகால்களை அமுக்குதல் மட்டுமல்லாமல் இழுத்துவிடுதல், மடக்கி நீட்டுதல் என தொடர்ச்சியான வழிமுறைகள் கொண்டது. அது கைகால்களுடன் மட்டும் நின்றுவிடாமல் விரல்கள், முட்டுகள், மணிக்கட்டுகள், தலை, கழுத்து, முதுகு, தோள்ப்பட்டை என்று ஒவ்வொரு உடல்பகுதிக்கும் பிரத்யேகமான நீவுதல், பிடித்துவிடுதல் முறைகளைக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ அற்புதமான பல யோகா முறைகளை மசாஜ் பயிற்சியாளர்கள், தங்கள் நீட்டி மடக்குதல் சிகிச்சையின் மூலம் வழங்கிவிடுகிறார்கள். இதனால் தாய் மசாஜ் முறையானது தசைகளை நன்கு தளர்வுறச் செய்து, ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. இது உடலையும், மனதையும் உற்சாகப்படுத்துகிறது. மற்ற முறைகளில் இருந்து மாறுபட்ட புத்துணர்ச்சியையும் மசாஜ் பெறுபவர் உணர்ந்துகொள்கிறார்.

உடையுடன்

வேறு சில மசாஜ் முறைகளில் உடையை களைந்துவிட்டு, முக்கிய பாகங்களை துணியால் போர்த்திவிட்டு பணியை ஆரம்பிப்பார்கள். ஆனால் தாய் மசாஜ் முறையில் வாடிக்கையாளர் விரும்பாவிட்டால் உடையை களையாமலே மசாஜ் செய்யப்படும். இதற்காக தளர்வான பருத்தி உடைகளை அணியச் செய்து மசாஜ் செய்வார்கள். அதுவே யோகா போன்ற அசைவுகளுக்கு இடையூறில்லாமல் இருக்கிறது. உள்ளாடைகளை மட்டும் அணியச்செய்தும் மசாஜ் தருவார்கள்.

யோகா மசாஜ்

தாய்லாந்து மசாஜ்முறைக்கு ‘தாய் யோகா மசாஜ்’ என்ற பெயரும் உண்டு. ஏனெனில் மசாஜ் பயிற்சியாளர்கள் நமது கால்களையும், கைகளையும் தடவிக் கொடுப்பதுடன் நில்லாமல் மூட்டுகள் வாரியாக மடக்கி, நிமிர்த்தி யோகா பயிற்சி போல செயல்படுத்துகிறார்கள். இதில் அக்குபிரசர் என்ற சிகிச்சை முறையும் கலந்திருக்கிறது. நமது பாரம்பரிய முறையான ஆயுர்வேத சிகிச்சை முறைகளும் கலந்திருக்கிறது. எனவே தாய் மசாஜ், பலவும் கலந்த பக்குவமான முறையாகி உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது.

துரித மசாஜ்

தாய்மசாஜ் செய்பவர், கைகளால் மட்டுமே இதனை வழங்குவதில்லை. முதுகில் ஏறி அமர்வது, கால் மூட்டுகளால் அழுத்துவது, பாதத்தால் மிதிப்பது, கை முட்டுகளால் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுப்பது என மசாஜ் ஆழமானதாக, உடல் வலு நிறைந்ததாக அமைகிறது. குழு மசாஜ் முறையில் பல வாடிக்கையாளருக்கு ஒரே அறையில் மசாஜ் செய்வது, ஒரு வாடிக்கையாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் துரிதமாக மசாஜ் செய்வதும் நடைபெறும்.

சிகிச்சை மசாஜ்

புத்தரின் பிரத்யேக மருத்துவராக கருதப்படுபவர் சிவகா கோமாரபட்ஸ். இவரைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அபூர்வ சிகிச்சை முறைகளை அறிந்திருந்த இவரே தாய்லாந்து மசாஜின் முன்னோடியாக இருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. மூலிகை மருந்துகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற அவர், இந்த மசாஜ் முறையில் பலருக்கு சிகிச்சை வழங்கியதாகவும் நம்பப்படுகிறது.

உடல் இயக்கங்கள் 72 ஆயிரம் வகையான பாதைகள் மூலம் நடைபெறுவதாக பழம்பெரும் இந்திய சிகிச்சை முறைகளில் கூறப்பட்டு உள்ளது. இந்த பாதைகளை வளப்படுத்தும்விதத்தில் தாய் மசாஜ் அமைகிறது. அதனால்தான் தாய் மசாஜ் இந்திய யோகப் பயிற்சி யுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது.
Tags:    

Similar News