செய்திகள்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், ஜெனிவா

பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை முறியடிக்க ஜெனிவாவில் இந்தியா அதிரடி வியூகம்

Published On 2019-09-09 13:34 GMT   |   Update On 2019-09-09 13:34 GMT
காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தான் முன்வைக்கும் பொய் பிரசாரத்தை முறியடிக்க ஜெனிவாவில் இந்தியா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஜெனிவா:

ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையில் உச்சக்கட்ட பனிப்போர் தொடங்கியுள்ளது.

இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் சமீபத்தில் முன்வைத்த கோரிக்கை போதிய நாடுகளின் ஆதரவு கிடைக்காததால் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது ஆண்டாந்திர கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கும் இந்திய அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள இந்தியாவின் (கிழக்கு பகுதி) வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் தாக்குர் சிங், பாகிஸ்தான் முன்னாள் தலைமை தூதர் அஜய் பிசாரியா ஆகியோர் அங்கு உலக நாடுகளின் பிரதிநிதிகளை இன்று சந்தித்து பேசினர்.



பாகிஸ்தானின் பொய் குற்றச்சாட்டுகளை நிர்மூலமாக்கும் வகையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு, அங்கு எடுத்துவரும் முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

கில்கிட்-பல்ட்டிஸ்தான் மக்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை பாகிஸ்தான் திடீரென்று விலக்கி விட்டதைப்போல் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்துவரும் நிலைப்பாடு என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்பதை சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் சபை பிரதிநிதிகள் மற்றும் பிற குழுவினருக்கு அவர்கள் தெளிவுப்படுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News