தமிழ்நாடு
பேரறிவாளனை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2022-01-29 07:06 GMT   |   Update On 2022-01-29 07:06 GMT
பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு முகப்பேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்பந்தமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜோலார்பேட்டை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

சிறுநீரகத் தொற்று மற்றும் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக அவருக்கு பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பினார்.

அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் திருப்பத்தூர் மாவட்டம் பழைய ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்தார். இதனால் 8-வது மாதமாக பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டு வீட்டிலேயே உள்ளார்.

அவரது வீட்டில் ஜோலார்பேட்டை போலீசார் பதிவேட்டில் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.

டாக்டர்களின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர், தருமபுரி, உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பேரறிவாளன் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

வேலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு திருக்குமரன் மற்றும் போலீசார் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளனை சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

முகப்பேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்பந்தமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று மாலை வீடு திரும்புவார் என போலீசார் தெரிவித்தனர்.





Tags:    

Similar News