செய்திகள்
திருப்பூரில் வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் கிருமிநாசினி தெளிப்பதுடன் கொசு மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு

Published On 2021-09-11 08:04 GMT   |   Update On 2021-09-11 08:17 GMT
பொதுமக்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்காததே தொற்று அதிகரிப்புக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் ஒரே நாளில் 113 பேருக்கு தொற்று உறுதியானது. 
 
இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 91,189ஆக அதிகரித்துள்ளது. 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,337ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை 936ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

எனவே பொதுமக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தொற்று நடவடிக்கைகளுக்கு  பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் ஜெகதீஷ் கூறுகையில்;

பொதுமக்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்காததே தொற்று அதிகரிப்புக்கு காரணம். பலர் முககவசம் அணியாமல் செல்கின்றனர். திருமண விழாக்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் கூடுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து திருப்பூருக்கு பலர் வந்து செல்வதும் தொற்று பரவலுக்கு காரணமாகும்.  

தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதற்காக நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்றார்.

இதனிடையே கொரோனா  பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மாவட்டம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிரடி சோதனை நடத்த  உள்ளனர். பனியன் நிறுவனங்கள், கடைகள்,  மார்க்கெட்டுகள் உள்ளிட்ட வற்றிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News