செய்திகள்
கோப்புபடம்

ஊரடங்கு தளர்வுகளால் சென்னை சாலைகளில் போக்குவரத்து அதிகரிப்பு

Published On 2021-06-07 08:11 GMT   |   Update On 2021-06-07 08:11 GMT
சென்னையில் இ-பதிவு இல்லாமல் ஆட்டோ, கார், மோட்டார்சைக்கிள்களில் வெளியில் சுற்றியவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

சென்னை:

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அத்தியாவசிய கடைகள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சுய தொழில் மேற்கொள்ளும் எலக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சு தொழிலாளர்கள் ஆகியோரும் இ-பதிவு பெற்று செல்லவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற கூடுதல் தளர்வுகளால் சென்னையில் இன்று காலை வாகனங்கள் அதிகளவில் சாலைகளில் காணப்பட்டன.

காலை 6 மணிக்கே வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் ஓடின. நேரம் செல்ல செல்ல இந்த எண்ணிக்கை மேலும் அதிகமானது. ஊரடங்கு தளர்வை பயன்படுத்தி தேவையில்லாமல் பலரும் வெளியில் வந்தார்கள்.

அதுபோன்று இ-பதிவு இல்லாமல் ஆட்டோ, கார், மோட்டார்சைக்கிள்களில் வெளியில் சுற்றியவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அவசியம் இன்றி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு இருந்தது.

ஆனால் இன்று அதனை பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல் வாகனங்களில் வெளியில் வந்தனர். இதுபோன்று சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மோட்டார்சைக்கிள்கள் மட்டுமன்றி கார், ஆட்டோக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்காக சென்னையில் இன்று 500-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் சென்றவர்களை நிறுத்தி இ-பதிவு வைத்து இருக்கிறார்களா? என்று சோதனை செய்தனர்.

அதுபோன்று இ-பதிவு செய்து இருந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடைகளை திறப்பதற்காக அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களது வாகனங்களில் காலையிலேயே கடைக்கு சென்றனர். இதனால் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி கிடந்த சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. மக்கள் நடமாட்டமும் கூடுதலாகவே இருந்தது.

இதையடுத்து மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கிறார்களா? முகக்கவசம் அணிந்துள்ளார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்தனர்.

அதுபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னையில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு நூறடி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. இதையடுத்து அங்கு போக்குவரத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி இருந்தனர்.

Tags:    

Similar News