செய்திகள்
புதிய ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

நவீன வசதிகளுடன் மின்சாரம், சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஆட்டோக்கள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2020-09-21 22:47 GMT   |   Update On 2020-09-21 22:47 GMT
கண்காணிப்பு கேமரா உள்பட நவீன வசதிகளுடன் மின்சாரம், சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஆட்டோக்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை:

கண்காணிப்பு கேமரா உள்பட நவீன வசதிகளுடன் மின்சாரம், சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஆட்டோக்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு ரூ.8 ஆயிரத்து 835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, சுமார் 35 ஆயிரத்து 520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

இந்த பயணத்தின்போது துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக் களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக ரூ.100 கோடி முதலீட்டில், சுமார் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் ‘எம்-ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது, ‘எம்-ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனம் ரூ.140 கோடி முதலீட்டில் சுமார் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆட்டோக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஆட்டோக்களில் கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதி, ஆபத்து பொத்தான் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ‘எம்-எலக்ட்ரிக்’ ஆட்டோக்களின் ஓட்டுநர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அமைச்சர்கள், தொழில்துறை முதன்மைச்செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நீரஜ் மித்தல், ‘எம்-ஆட்டோ’ குழுமத்தின் தலைவர் அ.மன்சூர்அலிகான், நிர்வாக இயக்குநர் யாஸ்மின் ஜவஹர் அலி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News