ஆன்மிகம்
ஹாசனாம்பா கோவில்

ஹாசனாம்பா கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது

Published On 2019-10-29 06:35 GMT   |   Update On 2019-10-29 06:35 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி திறக்கப்பட்ட, ஹாசனாம்பா கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது.
ஹாசன்(மாவட்டம்) டவுனில் ஹாசனாம்பா கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி 13 நாட்கள் மட்டும் திறக்கப்படும் இக்கோவிலில் ஹாசனாம்பா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் கோவில் நடை சாத்தப்படும் போது அங்கு தீபவிளக்கு ஏற்றப்படும். மேலும் கருவறையில் பூக்கள் வைக்கப்படும். அடுத்த ஆண்டு தீபா வளியையொட்டி தீபவிளக்கு அணையாமலும், பூ வாடாமலும் இருப்பது தான் கோவிலின் சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 13 நாட்கள் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 17-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன.

2-வது நாளான 18-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் பக்தர்கள் கர்நாடகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஹாசனாம்பாவை தரிசித்து சென்றனர்.

மேலும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., மந்திரி மாதுசாமி, கர்நாடக தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், நடிகை சாரா, பிரபல திரைப்பட இயக்குனர் ராக்லைன் வெங்கடேஷ், சாலுமரத திம்மக்கா உள்பட முக்கிய பிரபலங்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. நேற்றும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்தனர். இந்த நிலையில் முன்கூட்டியே குறிப்பிடப்படி 29-ந் தேதி(இன்று) கோவிலின் நடை சாத்தப்படுகிறது. இன்று காலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி உண்டு. அதன்பின்னர் அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

காலை 6 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. அப்போது கருவறையில் பூக்களும், விளக்கும் ஏற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து மாலை கோவில் அருகே உள்ள ஹாசனாம்பா பவனில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 
Tags:    

Similar News