தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் குறுந்தகவலை நம்பி ரூ.8 லட்சத்தை இழந்த வாலிபர்

Published On 2019-12-03 09:18 GMT   |   Update On 2019-12-03 09:18 GMT
வாட்ஸ்அப் செயலியில் வந்த குறுந்தகவலை நம்பி ரூ.8 லட்சம் பணத்தை இழந்த வாலிபர், தன் பணத்தை மீட்டுத்தரக் கோரி காவல் துறை உதவியை நாடியுள்ளார்.



அஞ்சுகிராமத்தை அடுத்த ஜேம்ஸ்டவுண் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ராஜா. இவரது மனைவி சகாய அனிஷா. இவர் நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவரின் செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் வாட்ஸ்அப் குளோபல் அவார்டு வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

மேலும் வாட்ஸ்அப்பில் அவருக்கு பரிசு தொகையாக ரூ.2 ¾ கோடி பணம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதோடு பரிசு தொகையை பெற வாட்ஸ்அப் மெசேஜ்ஜில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளும் படி கூறப்பட்டிருந்தது.

எனது கணவரும் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அந்த எண்ணில் பேசியவர்கள், என் கணவரிடம் பரிசு தொகையை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். இதற்காக அவர்கள் வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்தனர். அந்த வங்கி கணக்குக்கு என் கணவர் அவரது பாங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமும், வங்கி மூலமும் பல தவணைகளாக ரூ. 8 லட்சத்து 10 ஆயிரத்து 600 பணம் செலுத்தினார்.



பணம் பெற்றுக் கொண்டவர்கள் எங்களுக்கு பரிசு தொகையை கொடுக்கவில்லை. அதன்பின்பு தான் அவர்கள் எங்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது. எங்களை ஏமாற்றி ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 600 பண மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் லைசா சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் புகாரில் குறிப்பிட்ட நாக்பூர் நபர்கள் ராகுல், நெல்சன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் மட்டுமின்றி இதுபோன்ற மோசடிகள் நாடு முழுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு அடிக்கடி அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். இதுபோன்ற தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

மோசடி நபர்கள் இதுபோன்ற ஆசை வார்த்தைகளை வாட்ஸ்அப்பில் பரப்பி பணம் பறிக்க முயற்சிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதுபோல வங்கி கணக்கு எண், கிரெடிட், டெபிட் கார்டு ரகசிய எண்களை கேட்டும் பண மோசடி நடக்கிறது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும் ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் உஷாராக இருக்கும்படி போலீசார் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள். ஆனாலும் பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் இன்னும் தங்களின் உழைப்பால் சேர்த்த பணத்தை இழந்து வரும் சம்பவங்கள் தொடரத்தான் செய்கிறது.
Tags:    

Similar News