செய்திகள்
அமைச்சர் பாண்டியராஜன்

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு உதவ வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன்

Published On 2019-09-24 03:13 GMT   |   Update On 2019-09-24 03:13 GMT
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் மத்திய மந்திரிகளிடம் நேரில் வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

டெல்லியில் 3-வது சர்வதேச திருக்குறள் மாநாட்டை தமிழக கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மொரீசியஸ் நாட்டின் முன்னாள் கல்வி மந்திரியும், பன்னாட்டு திருக்குறள் அறக்கட்டளை தலைவருமான ஆறுமுகம் பரசுராமன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், ஆசிய ஆய்வுகள் நிறுவன தலைவர் ஜான் சாமுவேல் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் கீழடி அகழாய்வு தொடர்பாக மத்திய மந்திரிகளை சந்திக்க இருக்கிறேன். மத்திய அரசு இந்தி மொழிக்கு எப்படி முக்கியத்துவம் தருகிறதோ, அதைப்போல மற்ற இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் தருவதாக பா.ஜனதாவின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் மொழிகளுக்காக ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து தமிழ் வளர் மையத்துக்கு நிதிஉதவி கேட்க இருக்கிறோம். தமிழகத்துக்கு வெளியே 1 கோடியே 25 லட்சம் தமிழர்களும், இந்தியாவுக்கு வெளியே 1 கோடியே 50 லட்சம் தமிழர்களும் வசிக்கிறார்கள்.

இவர்களின் அடுத்த தலைமுறையினர் தமிழ் பேச தடுமாறுகிறார்கள். எனவேதான் அவர்களிடத்தில் தமிழை வளர்க்க உலகம் முழுவதும் 1000 இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதன்முதலாக பிரான்ஸ் நாட்டில் தமிழ் வளர் மையம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற இடங்களிலும் தமிழ் வளர் மையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு நிதி உதவி செய்தால் ஓராண்டுக்குள் 1000 இடங்களிலும் தமிழ் வளர் மையத்தை தொடங்கிவிட முடியும்.

தமிழகத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் இருந்துள்ளது என்பது கீழடியில் கண்டறியப்பட்டு உள்ளது. தொன்மையான நகர நாகரிகம் இருந்ததாக இதற்கு முன்பு கண்டறியப்பட்ட ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற இடங்கள் இந்தியாவில் இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள நகர நாகரிக சான்று கீழடி மட்டுமே.



இதை தமிழர் நாகரிகமாக அல்ல, இந்திய நாகரிகமாக கருதுவோம். இங்கு உலகத்தரம் வாய்ந்த அருட்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். அதற்காக மத்திய அரசிடம் நிதி உதவி கேட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், கலாசாரத்துறை மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோரை சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

Tags:    

Similar News