செய்திகள்
ராமதாஸ்

சென்னையில் 2வது விமான நிலைய பணியை உடனே தொடங்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

Published On 2021-07-23 09:47 GMT   |   Update On 2021-07-23 09:47 GMT
சென்னை விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 2.10 கோடி பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை என்றும், அதனால் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் மிகவும் அவசியமான இந்தத் திட்டம் தாமதப்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.

இந்தியாவின் 4-வது பெரிய விமான நிலையமான சென்னை விமான நிலையம் அதன் முழுத்திறனை விரைவில் எட்டிவிடும். கொரோனா காலத்திற்கு முன்பு வரை சென்னை விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 2 கோடி பேர் விமானப் பயணம் மேற்கொண்டு வந்தனர். சென்னை விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 2.10 கோடி பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

புதிய முனையங்களுடன் விமான நிலையம் விரிவாக்கப்பட்டாலும் கூட, அது அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதற்குள்ளாக சென்னை விமான நிலையம் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியை கடந்து விடும். அதனால் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் புதிய விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இதை மனதில் கொண்டு சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு உடனடியாக இறுதி செய்ய வேண்டும். மத்திய அரசும் உரிய அனுமதிகள் மற்றும் ஒப்பந்தங்களை வழங்கி எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு விரைவாக கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டிய தேவையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அது தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவதற்காக தமிழக அரசு, மத்திய அரசு, விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News