செய்திகள்
பி.ஏ.பி., வாய்க்காலில் கழிவு நீர் கலந்துள்ளதை படத்தில் காணலாம்.

பல்லடம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் விவசாயிகள் வேதனை

Published On 2021-09-26 07:16 GMT   |   Update On 2021-09-26 11:03 GMT
கடந்த சில வருடங்களாக கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குப்பைகள் குவிந்து, தண்ணீர் வந்து சேராத நிலை இருந்தது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள நொச்சிபாளையத்தில் பி.ஏ.பி.பாசன கிளை வாய்க்கால் உள்ளது. கடந்த சில வருடங்களாக கிளை வாய்க்கால்களில் குப்பைகள், ஆக்கிரமிப்புகள் இருந்தன. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்தப்பணத்தில்  வாய்க்காலை தூர் வாரினர்.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர்  வாய்க்காலில் வரத் துவங்கியது. ஆனால் அந்த தண்ணீருடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து வருவதைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

உகாயனூர் பிரிவில் உள்ள பி.ஏ.பி.பாசன மெயின் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு அல்லாளபுரம், அவரப்பாளையம்  வழியாக நொச்சிபாளையம் கிராமங்களிலுள்ள  கடைமடை விவசாய நிலங்களுக்கு பாசனம் கிடைக்கும் வகையில் கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குப்பைகள் குவிந்து, தண்ணீர் வந்து சேராத நிலை இருந்தது.

இதுகுறித்து பலமுறை பி.ஏ.பி.பாசனத் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லாததால், விவசாயிகள் நிலத்தடி நீர், லாரி தண்ணீர், போன்றவற்றை வாங்கி விவசாயம் பார்த்து வருகிறோம். இந்தநிலையில்  பி.ஏ.பி. பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறித்து அரசுஅறிவித்தது.

இனி அதிகாரிகளை நம்பி பயனில்லை என முடிவெடுத்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து எங்களது சொந்தப்பணத்தில் கிளை வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்தோம். இந்த நிலையில் பாசனத் தண்ணீரை எதிர்பார்த்திருந்த நிலையில் பி.ஏ.பி. பாசன நீருடன் சாக்கடைகழிவுநீர் கலந்து வருகிறது.

ஆங்காங்கே ஆக்கிரமித்திருந்த வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வாய்க்காலில் கலந்து வருகிறது. இதை வைத்து எப்படி விவசாயம் செய்வது. பி.ஏ.பி. தண்ணீரை எதிர்பார்த்து  சொந்தப்பணத்தில் வாய்க்கால் தூர்வாரியும், வாய்க்காலில் சாக்கடைகழிவுநீர் கலந்து வந்துள்ளதால் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News