செய்திகள்
அனில் தேஷ்முக்

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அனில் தேஷ்முக் மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Published On 2021-04-08 11:21 GMT   |   Update On 2021-04-08 11:21 GMT
அனில் தேஷ்முக் மீதான லஞ்சப் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான லஞ்சப் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அனில் தேஷ்முக் மற்றும் மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

முன்னதாக, மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்த பரம் பீர் சிங் சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது மிகப்பெரிய லஞ்ச ஊழல் புகாரை சுமத்தியிருந்தார். இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் பரம்பீர் சிங் கடந்த மாதம் 25-ம்தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் ``மும்பையில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த சச்சின் வாஸ் என்பவரிடம் ஒவ்வொரு மாதமும் மும்பை பீர் பார், ரெஸ்டாரன்ட்களில் லஞ்சமாக வசூலித்து தன்னிடம் 100 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அனில் தேஷ்முக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக சச்சின் வாஸ் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார்.

இது தவிர போலீஸ் உயரதிகாரிகளையும் தனது அலுவலகத்துக்கு அழைத்து லஞ்சம் வசூலித்து கொடுக்கும்படி அனில் தேஷ்முக் தெரிவித்தார். போலீஸ் அதிகாரிகளின் இட ஒதுக்கீட்டிலும் அரசியல் தலையீடுகள் இருந்தன. எனவே இந்தக் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என்னை இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தின்பகர் தத்தா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 31-ம் தேதி விசாரணை நடைபெற்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பரம் பீர் சிங் மட்டுமல்லாமல், வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ பாட்டீல் மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோரும் பரம்பீர் சிங் புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது மாநில அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பரம் பீர் சிங்கின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் இடமாற்றம் செய்யப்பட்டதால் இதுபோன்று புகார் செய்திருக்கிறார் என்று தெரிவித்தார். மூன்று மனுக்களையும் ஒன்றாக விசாரித்த நீதிமன்றம், இதில் 5-ம் தேதி தீர்ப்பளித்தது.

பரம்பீர் சிங் மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆரம்பகட்ட விசாரணையை 15 நாள்களில் நடத்தும்படியும், விசாரணையில் குற்றச்சாட்டுக்கு பூர்வாங்க ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.



அனில் தேஷ்முக் மாநில உள்துறை அமைச்சராக இருப்பதால் மாநில போலீசாரைக்கொண்டு விசாரிப்பது பாரபட்சமற்றதாக இருக்காது. எனவேதான் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அனில் தேஷ்முக்குக்குப் பின்னடைவாக அமைந்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து அமைச்சர் அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
Tags:    

Similar News