செய்திகள்
ஆர்யா ராஜேந்திரன்

நாட்டின் இளம் மேயர் - 21 வயதில் திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்றார் ஆர்யா ராஜேந்திரன்

Published On 2020-12-28 16:43 GMT   |   Update On 2020-12-28 16:43 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது. சில இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.

இதற்கிடையில், தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இதையடுத்து, மாநகராட்சிக்கு மேயரை தேர்வு செய்தவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டில் கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ள ஆர்யா ராஜேந்திரன்  என்ற 21 வயது இளம்பெண் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

100 உறுப்பினர்களை கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஆர்யா ராஜேந்திரன் மேயராக பொறுப்பேற்பதற்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதையடுத்து, 21 வயது நிரம்பிய ஆர்யா ராஜேந்திரன் இன்று திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட கலெக்டர் பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.  

ஆல் செயிண்ட் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பு பயின்றுவரும் ஆர்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடவன்முகல் தொகுதியில் கவுன்சிலராக வெற்றிபெற்றார்.

21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றதன் மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைவான வயதில் மேயர் பதவிபெறும் பெண் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றுள்ளார். கல்லூரி மாணவியான ஆர்யா இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ஆர்யா ராஜேந்திரனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
Tags:    

Similar News