தொழில்நுட்பம்

அனுமதியின்றி கூகுள் பே இயங்குவது எப்படி? டெல்லி நீதிமன்றம் கேள்வி

Published On 2019-04-10 12:39 GMT   |   Update On 2019-04-10 12:39 GMT
கூகுளின் மொபைல் பேமென்ட் சேவையான ஜிபே ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி எவ்வாறு இயங்குகிறது என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #GPay



இந்தியாவில் கூகுள் பே (ஜிபே) சேவை மத்திய பணப்பரிமாற்ற விதியை மீறுவதாகவும், மத்திய வங்கியிடம் இருந்து பணப்பரிமாற்றம் செய்வதற்கு முறையான அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக அபிஜித் மிஸ்ரா என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை நீதிபதி ராஜேந்திர மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.ஜெ. பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. விசாரணையில் ரிசர்வ் வங்கி மற்றும் கூகுள் இந்தியா நிறுவனம் தரப்பில் பதில் அளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முன் அனுமதியின்றி எப்படி கூகுள் பே இயங்குகிறது என டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. 



முறையான அனுமதியின்றி செயல்படுவதோடு பணப்பரிமாற்றம் செய்ய பயனரின் தனிப்பட்ட விவரங்களான ஆதார் மற்றும் நிரந்தர கணக்கு எண் உள்ளிட்டவற்றை சேகரிப்பது பற்றி மிஸ்ரா கவலை தெரிவித்திருந்தார். பொது நல மனுவில் ரிசர்வ் வங்கி உடனடியாக கூகுள் பே சேவையை நிறுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி பதில் அளித்திருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முறையான அனுமதி பெற வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி அனுமதித்த பேமென்ட் சேவை நிறுவனங்களின் பட்டியிலில் கூகுள் பே இல்லையென்றும் தெரிவித்துள்ளது.

பொது மக்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதிக்கப்படாத தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது இந்திய சட்ட விதிகளுக்கு எதிரானது என மிஸ்ரா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News