செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவின் 2-வது அலையை தடுக்க முககவசம் அணிவதே தீர்வு- சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

Published On 2021-04-12 11:07 GMT   |   Update On 2021-04-12 11:07 GMT
முககவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அனைத்து கடை வியாபாரிகளும் அறிவிக்க வேண்டும்.
மதுரை:

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. இதனால், நாளொன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் மதுரையும் உள்ளது.

மதுரையிலும் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மதுரை நகர் பகுதியில் 80 சதவீத பேரும், புறநகர் பகுதியில் 20 சதவீத பேரும் பாதிக்கப்படுகின்றனர். நகர் பகுதியில் அதிகம் பேர் பாதிக்கப்படுவதற்கு சரிவர முககவசம் அணிவதில்லை. மற்ற மாவட்டங்களை காட்டிலும் மதுரையில் முககவசம் அணிவதில் அனைவரும் மெத்தன போக்கையே கடைபிடிக்கின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க காரணம் அனைவரும் முக கவசம் அணியாமல் இருப்பது தான். இதன் விளைவாக தான் தற்போது கொரோனா உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தலைகவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் உயிரை காப்பாற்றி கொள்ள முககவசமும் முக்கியம். இப்போதைக்கு முககவசம் மட்டுமே சிறந்த தீர்வு.

முககவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அனைத்து கடை வியாபாரிகளும் அறிவிக்க வேண்டும். முககவசம் என்பது வாய், மூக்குப்பதியை முழுமையாக மூடும் வகையில் இருக்கும். ஆனால் நம்மில் பலர் அந்த முககவசத்தை வாய்ப்பகுதியை மட்டுமே மூடுகின்றனர். இதுபோல் சரிவர முக கவசம் அணியாமல் இருந்தாலும் கொரோனா உடனடியாக தாக்கும். அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் மக்கள் அதனை சரிவர பயன்படுத்தினால் தான் நல்லது. கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் மிகுந்த கவனத்துடன் கொரோனாவை கையாள வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News