செய்திகள்
ராதா கிருஷ்ணா

அன்பின் உதாரணம் ராதே கிருஷ்ணா

Published On 2021-10-25 12:05 GMT   |   Update On 2021-10-25 12:05 GMT
பாமா, ருக்மணி என கிருஷ்ணரின் முதன்மையான மனைவிமார்கள் மற்றும் ஏராளமான மனைவிமார்கள், பிள்ளைகள் என கூறப்பட்டிருந்தாலும் அன்பு, நிபந்தனையற்ற அன்பு எனும் பொழுது அங்கு ராதே கிருஷ்ணா என்று தான் கூறப்படுகின்றது.
கொரோனா கால கட்டத்தில் பல கட்டுப்பாடுகளை மக்கள் தங்கள் நலனுக்காக, சமுதாய நலனுக்காக பின்பற்ற வேண்டி இருந்தது. அநேகமாக அனைவரும் இதனை சிறப்பாகவே கடைபிடித்தனர். அரசாங்கமும் முழு மூச்சாய் மக்களை காப்பதில் சிறப்பு பணியாற்றியது. எல்லாம் நல்ல முறையில் நடந்ததால் இன்று நாம் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றோம்.

இந்த கால கட்டத்தில் கூட சில நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் பாதுகாப்பு கருதி இருந்தன. சைவ உணவு, அசைவ உணவு கடைகள் மூடப்படும் என்றால் முதல் நாள் போட்டி போட்டு கடைகளில் மக்கள் முந்தினர். அதே போன்று கூட்டம் தவிர்க்க ஒரு சில நாட்கள் கோவில், சர்ச், மசூதி இவைகளில் கட்டுப்பாடு இருந்தபோதும் இவை என்று திறக்கும் என்று மக்கள் ஏங்கினர். நாக்கின் சுவைக்காக சைவ, அசைவம் வேண்டிய மக்கள் ஆன்மீக சுவைக்காக கோவில்கள் செல்ல விரும்பினர்.

இதுதான் மக்களின் மனசு. வாழ்க்கையில் மக்களுக்கு ஆயிரம் தேவைகள் இருக்கலலம். கருத்துகள் இருக்கலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழ்மனது நிபந்தனையற்ற ஒரு அன்பிற்காக எதிர்பார்க்கின்றது. ஏங்குகின்றது. தவிக்கின்றது. ஏன்? பல இடங்களில் கூட தேடி அலைகின்றது. ஆனால் அவர்களுக்கு இந்த நிபந்தனையற்ற அன்பு கிடைக்கும் ஒரே இடம் கோவில், சர்ச், மசூதி இவைகள்தாம் என நம்புகின்றவர்கள் அதனை பின்பற்றுகின்றனர். அதனால் தான் கோவிலுக்கு செல்ல முடியாவிடில் தவியாய் தவித்து விடுகின்றனர்.

இப்போது ஒரு கேள்வி எழலாம்? இந்த மாதிரியான நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் உலகெங்கிலும் நிறைய உள்ளனரே. அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழலாம். தியானம், அமைதி, யோகா, கட்டுப்பாடுகள் இவை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சொந்தமானவைதான். சமுதாய கட்டுப்பாட்டினை பின்பற்றி அவரவர் விருப்பப்படி வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. சுதந்திரம் உண்டு. இங்கு நாம் பேச போவது ஆன்மீக நாட்டம் உடையவர்களுக்காக என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

‘அன்பே சிவம்’
இவை நம் ரத்தத்தில் ஊறிப் போன வார்த்தைகள். நாம் கொடுக்கின்றேமோ இல்லையோ ‘அன்பு’ நமக்கு வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். வாழ்வின் சத்தியம் இதுதான். அன்பு தான் அனைத்திலும் உயர்ந்தது. சிறந்தது. வாழ்வின் ஜீவநாடி. “என்னுடையது எனக்கு மட்டுமே உரியது”என்று கொள்ளாமல் ‘எல்லாம் எல்லோருக்கும் உரியது’ என்ற தூய அன்பு மனதில் இருந்தால் பிரச்சினை என்ற சொல்லே அகராதியில் இருக்காது. மனிதன் தோன்றிய காலம் முதல் ஆங்காங்கே முத்துக்கள் போல் சிலர் தோன்றி நம்மை வழி நடத்தினர். அவர்கள் நமக்கு கடவுளாகினர். ஞானிகள் ஆகினர், சித்தர்கள் ஆகினர், யோகிகள் ஆகினர்.

அவர்களை ஆராதிக்கிறோம். வணங்குகின்றோம். எல்லாம் செய்கின்றோம். ஆயினும் ‘நான் எனது’ என்ற எண்ணம் மக்களை விட்டு போனதாக தெரியவில்லை. கிறிஸ்துவ மதத்தில் நான் என்கிற ஆணவம் அறுக்கப்பட வேண்டும் என்பதனையே சிலுவையின் புனிதத்துவமாகக் கூறுவர். ‘love’ இந்த ஒரு வார்த்தையே பல வருடங்களுக்கு முன்னால் மிகத் தவறான வார்த்தையாகப் பார்க்கப்பட்டது, கருதப்பட்டது. mother's love. father's love, i love my kid என்ற பேச்சுக்கள் பழக்கத்தில் வர ஆரம்பித்த பிறகு love என்ற வார்த்தை அன்பு என்ற பொருள் கொண்டதாகவும் ஆயிற்று, இறைவனை ‘காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்க’ என மனமுருகி தூய அன்பினை வெளிப்படுத்திய வரிகளால் காதல், மனித ஆண், பெண் இரு பாலரிடம் இருந்து மாறி மனித உறவுகளுக்கு மேற்பட்ட புனித சொல்லாக தூய அன்பாக உணரப்பட்டது. இந்த உயரிய தூய அன்பு எல்லைகள் இல்லாதது. பரந்து விரிந்து கொண்டே செல்வது. வேறெந்த சிந்தனையும் இல்லாதது. மிக முக்கியமானதாக எந்தவித எதிர்பார்ப்புகளுமே இல்லாதது. நிபந்தனையற்றது.

இது சாதாரண மக்களுக்கு சாத்தியமாகுமா? மிக மிக கடினம். தாயின் அன்பினை மட்டுமே சற்று நெருக்கமாக ‘unconditional love -நிபந்தனையற்ற அன்பு’ என்று கொண்டு வந்தார்கள். அதனால் தான் தாய் தெய்வமாகப் போற்றப்படுகின்றாள். ஏழையின் சிரிப்பும், குழந்தையின் சிரிப்பும் தெய்வத்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகின்றது. ஒருவரின் உளமர்ந்த சில நொடி புன்னகை கூட எதிரில் இருப்பவரை மகிழ்ச்சி அடையச் செய்து விடும். ஒருவரின் புன்னகையால் மற்றவரது கோபதாபங்கள் ஓடி ஒளியும். ஆக்கப்பூர்வ சிந்தனைகள் மேலோங்கும். மனதால் ஒருபடி உயர்நிலை ஏற்றும். இதுதான் இறைவனின் சிறப்பு, மேள தாளங்கள், பூ, சந்தனம் மணக்க, தீப ஒளியில் இறைவனைக் காணும் பொழுது ‘நிபந்தனையற்ற ஙஅன்பினை நாம் பெறுகின்றோம்’ என்ற உள் உணர்வே நம்மை கோவில்களுக்கு இழுத்துச் செல்லுகின்றது.

இது இறைவன் நமக்குத் தரும் unconditional love. இப்படி eternal love, ectasy of love நித்திய அன்பு, பரவசம் இவற்றினை தெய்வீகத்தன்மை உடையதாக நாம் பார்க்கும் போது நமக்குத் தோன்றும் முதல் உதாரணம் ‘ராதே கிருஷ்ணா’ நவராத்திரி கொலு பொம்மைகளில் ‘ராதே கிருஷ்ணா’ இல்லாமல் இருக்காது. பளிங்கில் வண்ணநிற அலங்காரத்துடன் ராதே கிருஷ்ணா சிரித்துக் கொண்டு இருப்பார்கள். பல வீடுகளில் இதனை அழகுக்காகவே வைத்திருப்பர். கல்யாண பரிசு பொருட்களில் ராதே கிருஷ்ணா சிலையும் அதிகம் இடம் பிடிக்கும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று சிறு குழந்தைகள் ராதே கிருஷ்ணா போல் அலங்கரித்து நடனம் ஆடுவர்.

ராதை லட்சுமியின் அவதாரம் என்று கூறப்படுகின்றது. ராதை என்றாலே அன்பு, மென்மை, இரக்கம், பக்தி என்பர்.
இந்த தேவதை ராதே-கிருஷ்ணரின் ஆத்மா, ஆத்ம சக்தி என்பர். சிவசக்தி, லட்சுமி நாராயணன் என்பது போல் கிருஷ்ணர் என்றாலே ‘ராதே கிருஷ்ணா’ என்று தான் கூறுவர்.

ராதே, ராதிகா, ராதா, ராணி என்ற பெயர்களும் ராதைக்கு உண்டு. தன்னலமற்ற அன்பு என்பதன் விளக்கமே ராதா தான் என்பர். எதிர்பார்ப்பு என்ற ஒன்று இல்லாத அன்பு. ஸ்ரீமத் பாகவத்திலோ, மகா பாரதத்திலோ ராதையினைப் பற்றிய குறிப்புகள் எங்குமே இல்லை என வாதிப்போரும் உண்டு. வருஷமானு, கமலாவதி தம்பதியினருக்கு மகளாக வந்த ராதையினை பர்சானா மன்னரின் மகள் என்றும் கூறுவர். சிலர் ராதை சாதாரண ஆயர்குல பெண் மற்ற கோபியரைப் போல் ராதையும் ஒரு கோபிகையே என்பர். ராதை அயன் என்பவரை திருமணம் செய்ததை ஒரு போல எல்லோரும் கூறுவர். ராதை- கிருஷ்ணர் பற்றி அதிகம் தெரிய வந்ததே பிரம்ம வைவ்ரத புராணம்  மற்றும் கீத கோவிந்தம் இவைகளின் மூலமாகத்தான் இன்றும் மதுரா. பிருந்தாவன் பகுதிகளில் கோகுலாஷ்டமி போல் ராதா அஷ்டமி (ராதாயின் ஜன்மதினம்) ஹோலிப் பண்டிகை இவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்வதே ராதே, ராதே என்றுதான் உள்ளது. ராதைக்கான கோவில் உள்ளது.

பாமா, ருக்மணி என கிருஷ்ணரின் முதன்மையான மனைவிமார்கள் மற்றும் ஏராளமான மனைவிமார்கள், பிள்ளைகள் என கூறப்பட்டிருந்தாலும் அன்பு, நிபந்தனையற்ற அன்பு எனும் பொழுது அங்கு ராதே கிருஷ்ணா என்று தான் கூறப்படுகின்றது. வீட்டில் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை தனி படமாகவோ, சிலையாகவோ, பொம்மையாகவோ யாரும் வைப்பதில்லை. ஆனால் ராதே கிருஷ்ணா படம் போஸ்டர்கள், சிலைகள், பொம்மைகள் எங்கும் இருக்கும். காரணம் நிபந்தனை அற்ற அன்பு.

ராதை கிருஷ்ணரை விட வயதில் மூத்தவள் திருமணமானவள். கிருஷ்ணரின் அந்தஸ்து மிகவும் உயரியது என்றெல்லாம் பேசியவர்கள் கூட இந்த அன்பின் இலக்கணத்தில் ராதைக்கு நிகராகக்கூட யாரையும் சொல்லமுடிவதில்லை.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வைகளாக கூறப்படும் நிகழ்வுகளை இன்றைய ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. நிகழ்வுகளுக்கு ஆதாரம் உள்ளது. இன்று வரை ‘ராதேகிருஷ்ணா’ என்று கொண்டாடப்படுகிறது என்றால் அதில் ஏதோ ஆழ்ந்த தேவ ரகசியம் உள்ளது. சத்தியம் உள்ளது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

நிபந்தனையற்ற அன்புக்கு அளவுஇல்லை. எதிர்பார்ப்பு இல்லை. இதனை உறவின் மனவலிவு என்று கூறலாம்.
10 வயது பாலகனாக கிருஷ்ணர் கோகுலத்தில் இருந்து சென்று கம்சனை அழித்து மதுராவின் அரசனானார். பல நிகழ்வுகள் நடந்தேறின. சில குறிப்புகளில் ராதை கூட கிருஷ்ணரது நாட்டில் பணிப்பெண்ணாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ராதை இவ்வுலகை நீங்கும் தருவாயில் அவள் அருகே அமர்ந்து கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்தார். அதன் பின் அவர் புல்லாங்குழலினையே உடைத்து வாசிக்காது இருந்தார் என்றெல்லாமும் கூறப்பட்டுள்ளது.

காந்தாரி தன் கணவன் திருதிராஷ்டிரனுக்கு கண் தெரியாது என்ற காரணத்தினால் தன் கண்களையும் கட்டிக் கொண்டவள்தான். தன் மகன் துரியோதனுக்காக ஒரே ஒரு முறை தன் கண்ணைத் திறந்து தன் பார்வை பலத்தினால் துரியோதனன் உடலை வஜ்ரமாக்கியவள். ஆனாலும் யாரும் காந்தாரி, திருதிராஷ்டிரன் படம், பொம்மைகளை வீட்டில் வைத்துக் கொள்வதில்லை.
பக்த மீரா திருமணம் ஆனாலும் கிருஷ்ண பக்தியிலேயே தன் வாழ்நாளினை கழித்தவர். மீராவினை குறிப்பிடும் பொழுது ‘பக்த மீரா’ என்றுதான் குறிப்பிடுகின்றோம்.

ஆண்டாள் சிறு வயதிலிருந்தே விஷ்ணுவினை அடைய வேண்டும் என்று எண்ணி ஜோதி ரூபமாய் இறைவனுடன் கலந்தவர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரமாண்ட கோவில் கட்டி வழிபடுகின்றோம். ஆனால் ராதையினைப் பற்றி சொல்லும் பொழுது மட்டும்தான் ராதே கிருஷ்ணா என்கின்றோம். இங்கு கிருஷ்ணரும், ராதையும் இரு உருவங்களாக இயங்கினாலும் ஆன்மா இவர்களுக்கு ஒன்று என்பதால் தான் இத்தனை சிறப்பு பெறுகின்றது. கடும் தவம், துறவரம் என மார்க்கங்கள் பல இருந்தாலும் நிபந்தனையற்ற அன்பால் இறைவனை, உயர்நிலையினை அடைய முடியும் என்பதனை ராதாராணி நிரூபித்து விட்டார்.

ராதை மகாலட்சுமியின் அம்சம். வ்ருஷபானு அவரது மனைவியால் ஒரு தாமரைப் பூ மீது குழந்தையாக கிடந்தவள். தெய்வீக அழகு கொண்ட அந்த குழந்தையினை அச்சிற்றரசரும் அவரது மனைவியும் மகிழ்ந்து கொண்டாடினர். ஆனால் குழந்தை மட்டும் கண்ணை திறக்கவே இல்லை. பெற்றோரும் பார்க்காத வைத்தியம் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. அப்பொழுது அவர்கள் கிருஷ்ணரின் பெற்றோர்களை காணச் சென்ற சமயத்தில் உணர்வால் கிருஷ்ணனை அறிந்து கண்களைத் திறந்து கிருஷ்ணரைக் கண்டவள். கிருஷ்ணர் பூமிக்கு வரும் முன்பே தான் முதலில் வந்த காவல் தெய்வம் ராதை.

* ராதைக்கு பர்சானாவில் கோவில் கட்டியவர் (உத்திரபிரதேசம்) ஸ்ரீகிருஷ்ணரின் கொள்ளு பேரன் அரசர் வஜ்ரநாப் ஆவார். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த கோவில் மீண்டும் சீரமைக்கப்பட்டது. இங்கு ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், ஸ்ரீராதா ஜன்ம அஷ்டமியும் முக்கியமான விழாக்கள். பூஜையில் 56 வகையான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. * ராதை இனிமையானவள். என்றும் இளமை தோற்றம் கொண்டவள்.

* பரவச புன்னகை கொண்டவள். ராதையின் சமையல், பாட்டு, நடனம் என அவளது பல கலைகளும் போற்றப்பட்டன.
* மென்மையானவள், மிக அழகிய தோற்றம் கொண்டவள்.
* பொறுமையானவள், பக்தியின் உச்சம்... அன்பின் மறுபெயர், ஊரே போற்றும் தத்துவத்தில் உருவான கிருஷ்ணர் கூட ராதையிடம் சரணாகதிதான். அதனால்தான் ‘ராதே கிருஷ்ணா’ என முதலில் ராதையின் பெயருடன் குறிப்பிடப்படுகின்றார். காரணம் அன்பு, தவம், சத்தியம், கருணை மழை ராதை.
* ராதையின் புகழை மட்டுமே இங்கு பேசுவதால் பாமா அவர்கள் சிறப்புகளை குறிப்பிடவில்லை.
பொதுவில் பொறுமையின்மை, கடினமான பேச்சு இவற்றினை கொண்டவர்கள் மென்மையான, பண்பான உதாரணங்களை அடிக்கடி பார்க்க வேண்டும். அவ்வகையில் சுயநலமற்ற மென்மையான ‘ராதே கிருஷ்ணா’ உருவபடம் போன்றவை மனதிற்கு இதமாகத்தான் இருக்கும். எதிர்பார்ப்புகள் இல்லாத, நிபந்தனையற்ற அன்பு என்பதனை இறைவன், இறைவியிடமே கேட்டு பெற்று உணரலாம். உதாரணமாக நீங்கள் அன்றாடம் விளக்கேற்றி பூ வைத்து உங்கள் பூஜை அறையில் வணங்கும் பொழுது அதற்கு ஒரு சக்தி இருக்கும். நிமித்தமாக உங்களிடம் பேசும். இதனை அனுபவ ரீதியாக அநேகர் உணர்ந்திருப்பர்.  அப்படியிருக்க ஒரு தூய அலையினை நீங்கள் நோக்கி சென்றால், பெயரை உச்சரித்தால் அந்த அன்பின் பாவத்தினை பெற்று மன அமைதியோடு வாழ்வர் என்பதற்காகவே ராதே கிருஷ்ணா பஜனைகள் ராதே கிருஷ்ண கல்யாண நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. தூய உயர் அன்பினை சாதாரண மனித குணநலன்களோடு ஒப்பிடாது நாமும் உயர்நிலையினை அடைய முயற்சிக்கலாமே. ராதே கிருஷ்ணா!
Tags:    

Similar News