செய்திகள்
நீரஜ் சோப்ரா

இந்தியா ஒரு தங்கப் பதக்கத்துடன் திருப்தி அடைய முடியாது -நீரஜ் சோப்ரா

Published On 2021-08-25 13:56 GMT   |   Update On 2021-08-25 13:56 GMT
ஒலிம்பிக் போட்டியில் இருந்து திரும்பிய பிறகு, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் தனது பயிற்சி முற்றிலும் தடைபட்டதாக நீரஜ் சோப்ரா கூறி உள்ளார்.
புதுடெல்லி:

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக், ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார் நீரஜ் சோப்ரா. இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தனது நிலையை மேம்படுத்தினார். முதல் மூன்று முயற்சிகளிலும் தங்கப் பதக்கத்துக்கான நிலையைத் தக்க வைத்துக் கொண்டார். நீரஜ் சோப்ராவின் சாதனையை நாடே கொண்டாடியது. 

இந்த வெற்றியைத் தொடர்ந்து உத்வேகத்துடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ள 
நீரஜ் சோப்ரா
, அடுத்தடுத்து சர்வதேச பதக்கங்கள் வெல்ல ஆர்வமாக உள்ளார். 



இந்நிலையில், ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்த நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கப் பதக்கத்துடன் இந்தியா திருப்தி அடைய முடியாது என கூறி உள்ளார்.

“பதக்கம் வென்ற பிறகு சில நாட்களுக்கு நாம் அதை கொண்டாடுவோம், பின்னர் அனைவரும் அதை மறந்துவிடுவார்கள். அப்படி இருக்கக் கூடாது.  போட்டிகளில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. இந்த மாத இறுதியில் ஒரு டயமண்ட் லீக் போட்டி உள்ளது. நான் அதில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து திரும்பிய பிறகு, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் எனது பயிற்சி முற்றிலும் தடைபட்டது. 

அதனால்தான் இப்போது என் உடற்தகுதி குறைந்திருப்பதாக உணர்கிறேன். என்னால் சரியாக போட்டியிட முடியாது. எனவே, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். இந்த விஷயங்கள் இந்திய விளையாட்டில் மாற வேண்டும். மற்ற அனைத்து ஒலிம்பிக் சாம்பியன்களும் டயமண்ட் லீக்கில் பங்கேற்கிறார்கள். அவர்களின் போட்டி தொடர்கிறது. ஒரு தங்கப் பதக்கத்தால் நாம் திருப்தி அடைய முடியாது. சர்வதேச அளவில் நாம் சிந்திக்க வேண்டும். டயமண்ட் லீக் போன்ற உலகளாவிய நிகழ்வுகளில் நாம் தொடர்ந்து பங்கேற்க வேண்டும்” என்று நீரஜ் தெரிவித்தார்.
Tags:    

Similar News