ஆன்மிகம்
புனித சவேரியார்

புனித பிரான்சிஸ் சவேரியார் வரலாறு

Published On 2021-08-16 03:47 GMT   |   Update On 2021-08-16 03:47 GMT
கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று, அங்கு ஆட்கள் கூடியதும், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளைக் கூறியும், நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார்.
புனித பிரான்சிஸ் சவேரியார், 1506ம் ஆண்டு, ஏப்ரல் 7ம் நாள், இஸ்பெயின் நாட்டின் Navarre என்ற ஊரில், புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். அப்பகுதியில் பாஸ்கு மொழியே பேசப்பட்டது. இவரது தந்தை யுவான் தெயாசு அவர்கள், அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார். சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர். பிரான்சிஸ் சவேரியார், தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்து, தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார்.

1525ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ் பெற்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில், மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ம் ஆண்டு மெய்யியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530ம் ஆண்டு முதல் 1534ம் ஆண்டு வரை, அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார். அச்சமயத்தில், "இனிகோ' எனப்படும், இலொயோலா இஞ்ஞாசியார், தனது 39வது வயதில், அங்கு கல்வி கற்க வந்தார்.

இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம், "பிரான்சிஸ், ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவருக்கு என்ன பயன்?'' என்ற, இயேசுவின் திருச்சொற்களைச் சொல்லி வந்தார். இந்த வார்த்தைகள் சவேரியாரின் வாழ்வையே திசை திருப்பின. இலொயோலா இஞ்ஞாசியாருடன் இணைந்தார் அவர். 1534ம் ஆண்டு இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கிய புனித இஞ்ஞாசியாருடன் இருந்த முதல் ஆறு தோழர்களில் புனித பிரான்சிஸ் சவேரியாரும் ஒருவர்.

பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஏழு தோழர்களும், கல்வியை முடித்து, புனித பூமிக்குச் செல்லும் நோக்கத்தில், இத்தாலியின் வெனிஸ் நகருக்கு வந்தனர். அந்நகரில், 1537ம் ஆண்டு, ஜூன் மாதம் 24ம் நாள், சவேரியார், அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார். வெனிஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த சமயத்தில், இவர்களது போதனைகள் மற்றும் நோயாளிகள் மத்தியில் ஆற்றிய நற்பணிகளால், மத்திய இத்தாலியில் இவர்களது புகழ் பரவியது.

பல கத்தோலிக்க அரசர்கள், இவர்களின் பணிகளை நாடினர். புதிதாக பலரும் இவர்களுடன் இணைந்தனர். புனித பூமிக்குச் செல்லும் ஆவல் நிறைவேறாததால், இஞ்ஞாசியார் தலைமையில், இவர்கள் அனைவரும் உரோம் நகர் வந்து, அப்போதைய திருத்தந்தை 3ம் பவுல் அவர்களிடம் தங்களை அர்ப்பணித்தனர். அதேநேரம், போர்த்துக்கல் அரசர் 3ம் ஜான் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், ஆசியாவில் தனது புதிய காலனி நாடுகளில் நற்செய்தியை அறிவிக்கவும், உழைப்பில் ஊக்கமுள்ள அருள்பணியாளர்களைத் தந்து உதவுமாறு திருத்தந்தையிடம் வேண்டினார்.

திருத்தந்தையின் விருப்பத்தின்பேரில், புனித இஞ்ஞாசியார், தனது தோழர்களில் ஒருவரை, ஆசியாவுக்கென தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர், நோயால் தாக்கப்படவே, அவருக்குப் பதிலாக, சவேரியாரைக் குறித்தார், இஞ்ஞாசியார். தனது தலைவர் குறித்த அடுத்த நாளே, அதாவது, 1540ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் நாள், சவேரியார், இந்தியாவுக்குச் செல்வதற்காக, உரோம் நகரிலிருந்து முதலில் லிஸ்பன் நகருக்குப் பயணமானார். திருத்தந்தை 3ம் பவுல் அவர்களும், 1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள், இயேசு சபையை, ஒரு துறவு சபையாக அங்கீகரித்தார்.

புனித சவேரியார், லிஸ்பன் நகரில் ஓராண்டு இறைப்பணி செய்த பின்னர், இந்தியாவிற்கு கப்பல் பயணத்தை மேற்கொண்டார். 1542ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி கோவாவை வந்தடைந்த அவர், முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும், பின்னர் கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார். குறிப்பாக, கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.

இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று, அங்கு ஆட்கள் கூடியதும், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளைக் கூறியும், நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். புனித பிரான்சிஸ் சவேரியார், மணப்பாட்டில் தங்கியிருந்த குகை, அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன, இன்றும் அவரின் புனித வாழ்வுக்குச் சான்றுகளாக உள்ளன. கடற்கரையில் உள்ள அந்தக் கிணற்று நீர், உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருப்பதை, திருப்பயணிகள் சுவைத்து புனிதப் பரவசம் அடைகின்றனர்.
Tags:    

Similar News