உள்ளூர் செய்திகள்
பலியான சிறுமி மகாலட்சுமி

சூடு வைத்து மிளகாய் வற்றல் புகையை சுவாசிக்க வைத்ததால் துடிதுடித்து சிறுமி உயிரிழப்பு

Published On 2022-01-10 09:29 GMT   |   Update On 2022-01-10 09:29 GMT
குழந்தைக்கு தண்டனை கொடுத்து திருத்த வேண்டும் என நினைத்து எடுத்த முடிவு விபரீதத்தில் முடிந்த சம்பவம் வேப்பந்தட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. குவாரியில் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி

மணிமேகலை. இவர்களுக்கு மகாலட்சுமி (வயது 10), விக்னேஷ் (7), சுப்புலெட்சுமி (3) என்ற 3 குழந்தைகள் இருந்தனர்.

இதில் மகாலெட்சுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி மகாலட்சுமி கடந்த 6-ந்தேதி தனது வீட்டிற்கு

அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து 70 ரூபாய் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி மகாலட்சுமியின் தாய் மணிமேகலையிடம் உறவினர் புகார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை மகளை கண்டித்தார். மேலும்

தன்னுடைய உறவினர் ஒருவருடன் சேர்ந்து சிறுமியிடம் பணம் திருடலாமா? எனக்கூறி நெருப்பில் மிளகாய் வற்றலை போட்டு அந்தப் புகையை

சுவாசிக்குமாறு அமுக்கி பிடித்துள்ளனர்.

இதில் சிறுமிக்கு கண் எரிச்சலுடன், அதிக மூச்சுத்திணறலும் ஏற்பட்டு துடித்துள்ளார். மேலும் இனிமேல் பணத்தை எடுக்க மாட்டேன் என்று கெஞ்சியுள்ளார்.

ஆனால் கல் நெஞ்சம் படைத்த தாய், அதோடு விடாமல் சிறுமியின் கால் மற்றும் வாய்ப்பகுதியில் சூடு வைத்துள்ளார்.

இதில் வேதனையின் உச்சிக்கே சென்ற சிறுமி ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தார். இதனால் பதற்றமான பெற்றோர் உடனடியாக மகளை பெரம்பலூர் அரசு

மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் மர்ம மரணம் என்று

வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சாவிற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறுமி மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிந்து மருத்துவ குழுவினர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் சிறுமியின் தாய் மற்றும் உறவினர் கைது செய்யப்படுவார்கள்

என்று போலீசார் தெரிவித்தனர். குழந்தைக்கு தண்டனை கொடுத்து திருத்த வேண்டும் என நினைத்து எடுத்த முடிவு விபரீதத்தில் முடிந்த சம்பவம் வேப்பந்தட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இன்று பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் வக்கீல் அய்யம்பெருமாள் தலைமையில், உறுப்பினர்கள் டாக்டர் பழனிவேல்,

சுரேஷ், அமுதா, ஜெயந்தி உள்ளிட்ட குழுவினர் சம்பவம் நடந்த வீட்டில் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News