செய்திகள்
கோப்பு படம்

தடைசெய்யப்பட்ட அமைப்பினர் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி உள்ளனரா? - அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2021-01-12 10:00 GMT   |   Update On 2021-01-12 10:00 GMT
தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி உள்ளனரா? என்பதற்கு மத்திய அரசு நாளை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

அந்த வழக்குகளை மொத்தமாக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை மறு உத்தரவு வரும் வரை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் இந்த போராட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளனர் என தகவல்கள் தொடர்பாக எங்களுக்கு விண்ணப்பங்கள் உள்ளதே? அது உண்மைதானா என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால், போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என கூறினார்.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், விவசாயிகள் போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனரா? என்பது தொடர்பாக மத்திய அரசு நாளை பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உளவுத்துறையின் தகவல்களை நாளை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்வதாக மத்திய அரசின் வழக்கறிஞர் கேகே வேனுகோபால் தெரிவித்துள்ளார்.      
Tags:    

Similar News