ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் ரத்து

Published On 2021-10-04 06:56 GMT   |   Update On 2021-10-04 06:56 GMT
பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் கோவில் மற்றும் வளாகங்கள் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

காலை 7 மணியில் இருந்து பகல் 12 மணி வரை ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிலி வரையிலும், கோவிலில் அனைத்துப் பூஜைகளுக்கும் பயன்படுத்தும் தாமிர, பித்தளை பொருட்களும், துணை சன்னதிகள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள், தூண்கள், மாடங்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படும்.

தூய்மைப்பணி முடிந்ததும் மஞ்சள், சந்தனம், குங்குமம், நாமக்கொம்பு, ஸ்ரீகந்தம் சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சையிலை, பச்சை கற்பூரம், கிச்சிலிகட்டை சூரணம் ஆகிய சுகந்த திரவிய பொருட்கள் தூண்கள், மாடங்கள், சுவர்கள், மூலவர் அறை உள்பட பல்வேறு இடங்களில் பூசப்படுகிறது. அதன் பிறகு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், நெய்வேத்தியம் செய்யப்படும்.

ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் நாளை காலை 7 மணி முதல் 12 மணி வரை 5 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதால் விஐபி பிரேக் தரிசனம் சிபாரிசு கடிதங்கள் இன்று தரப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் கோவில் மற்றும் வளாகங்கள் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல் கோவில் முழுவதும் அலங்கரிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நேற்று திருப்பதியில் 29,524 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,183 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.75 கோடி உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Tags:    

Similar News