செய்திகள்
பிரேமலதா

எனது பிரசாரத்தை தடுக்கவே கொரோனா பரிசோதனை செய்ய கட்டாயப்படுத்தினர்- பிரேமலதா குற்றச்சாட்டு

Published On 2021-03-28 14:48 GMT   |   Update On 2021-03-28 14:48 GMT
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது தான் எங்களுடைய முதல் வாக்குறுதியாகும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் விருத்தாசலத்தில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விருத்தாசலத்தில் கடந்த 10 நாட்களாக அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன். ஏற்கனவே விஜயகாந்த் வெற்றி பெற்ற தொகுதிதான் இது. அவர் மக்களுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் செய்த நலத்திட்டங்களை மக்களே என்னிடம் தெரிவிக்கின்றனர்.

அது நிச்சயமாக வாக்குகளாக மாறும். எனக்கு அமோக வரவேற்பு உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தே.மு.தி.க., கோகுலம் மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றோம். அப்படி இருக்கும்போது விருத்தாசலத்தில் சுயேச்சையாக போட்டியிடும் ஒரு பெண்ணிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சியை சேர்ந்த அந்த சின்னம் இருக்கக்கூடாது என தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை முடிவு வரவில்லை. விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.

நான் வேட்புமனு தாக்கல் செய்த அன்று மட்டும் தான் சுதீஷ் உடன் இருந்தார். அதன்பிறகு உடனே ஊருக்கு கிளம்பி விட்டார். அப்படி இருக்கும்போது எனக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறி நான் பிரசாரத்தில் இருந்தபோது என்னை வலியுறுத்தியது கண்டிக்கத்தக்கது.

நான் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்துவிட்டு தான் பிரசாரத்திற்கு வந்துள்ளேன்.

கொரோனா தடுப்பு ஊசி இரண்டு முறை போட்டுள்ளேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை என தெளிவாக சொல்லியும் நீங்கள் பரிசோதனைக்கு வரவேண்டும் என கூறி என் பிரசாரத்தை தடை செய்யவே அவர்கள் முயற்சி எடுத்தனர். அதை நாங்கள் கண்கூடாகவே பார்த்தோம். ஆனால் நாங்கள் சட்டத்திற்கும், நீதிக்கும் உட்பட்டவர்கள்.

அதனால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். 5 மணி நேரத்தில் ரிசல்ட் கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் மறு நாள் ஆகியும் ரிசல்ட் வரவில்லை. என்னை பிரசாரத்திற்கு போகவிடாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது எனக்கு தெளிவாக தெரிந்தது. நான் ஏற்கனவே தனியாரிடம் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் நெகட்டிவ் என்று வந்ததை தெரிந்து கொண்ட பிறகு நெகட்டிவ் என சான்றிதழ் கொடுத்தனர். வேட்பாளர் என்பவர் மக்களை சந்திக்க வேண்டும். மக்களை சந்திக்கும் என்னை யாராலும் தடுக்க முடியாது.

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது தான் எங்களுடைய முதல் வாக்குறுதியாகும். என் குரல் ஒட்டுமொத்த பெண்களின் குரலாக நிச்சயமாக சட்டசபையில் ஒலிக்கும். விருத்தாசலம் தொகுதிக்கு பிரசாரம் செய்ய நிச்சயம் விஜயகாந்த் வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News