செய்திகள்
நீதிமன்றம்

மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 8 ஆண்டு கடுங்காவல்

Published On 2021-02-06 01:52 GMT   |   Update On 2021-02-06 01:52 GMT
மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 8 ஆண்டு் கடுங்காவல் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை:

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்தவர் சச்சின் மோரே(வயது39). இவரது மனைவி ரஞ்சனா. வேலையில்லாமல் சுற்றி வந்த சச்சின் மோரே அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியை துன்புறுத்தி உள்ளார். ரஞ்சனா வேலைக்குசென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு ரஞ்சனா வீட்டில் தயிர் சாப்பிட்டு கொண்டு இருந்து உள்ளார். அப்போது மதுபோதையில் சச்சின் மோரே வந்துள்ளார். அவர் பூனையை போல தயிரை சாப்பிடுவதாக மனைவியிடம் கூறியுள்ளார். என் அம்மா வீட்டில் இருந்து வாங்கி வந்த தயிரை நான் சாப்பிடுகிறேன் என ரஞ்சனா பதிலுக்கு கூறியுள்ளார். இதையடுத்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சச்சின் மோரே கத்தியை எடுத்து மனைவியை வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த ரஞ்சனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரை காப்பாற்றினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சச்சின் மோரேவை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. அப்போது, மனைவி ரஞ்சனா பாத்திரம் வைத்திருந்த இடத்தில் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக சச்சின் மோரே தரப்பு வக்கீல் வாதாடினார்.

எனினும் அதை நீதிபதி ஏற்க மறுத்தார். மேலும் மருத்துவ அறிக்கைகள், சாட்சியங்களை வைத்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சச்சின் மோரேவுக்கு 8 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு கூறினார்.
Tags:    

Similar News