செய்திகள்
தேவர் சிலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 186 வழித்தடங்களில் தேவர் நினைவிடத்திற்கு வாகனங்கள் செல்ல தடை

Published On 2021-10-27 05:38 GMT   |   Update On 2021-10-27 05:38 GMT
கமுதி தனி ஆயுதப்படை சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பசும்பொன், கமுதி பகுதிகளை கண்காணிக்கும் வகையில் 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 186 வழித்தடங்களில் தேவர் நினைவிடத்திற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

148 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 900 இரும்பு உலோக தடுப்புகள் நிலை நிறுத்தப்பட்டு, 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் வாடகை வாகனங்கள், அனுமதி பெறாமல் பசும்பொன் வரும் வாகனங்களை சோதனை செய்து கட்டுப்படுத்தும் நோக்கில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 8 இணையவழி சோதனை சாவடிகள் உட்பட தீவிர சோதனை சாவடிகள் 39 அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.

காவல் சோதனைச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட உள்ளன. கமுதி தனி ஆயுதப்படை சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பசும்பொன், கமுதி பகுதிகளை கண்காணிக்கும் வகையில் 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் ஆளில்லா பறக்கும் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. விதிமீறலில் ஈடுபடுவோர், வாகனங்களை படம் பிடிக்க 80 கையடக்க வீடியோ கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

10 இடங்களில் கலவர தடுப்பு வாகனங்கள், 8 இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வாகனங்கள், அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள 16 இடங்களில் ஆம்புலன்ஸ்கள், 18 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், போலீசார் நலனை கருத்தில் கொண்டு 10 நடமாடும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் டி.ஜி பி. (சட்டம், ஒழுங்கு) மேற்பார்வையில், தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் 4 டி, ஐ.ஜி., க்கள், 19 எஸ்.பி.க்கள், 28 கூடுதல் எஸ்.பி., க்கள் 70 உதவி மற்றும் டி.எஸ்.பி.,க்கள் மற்றும் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் என 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

53 வழித்தடங்களில் நான்கு சக்கர வாகனங்களிலும், 57 வழித்தடங்களில் இரண்டு சக்கர வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் வட்டாட்சியர் அந்தஸ்தில் 9 நிர்வாகத்துறை நடுவர்கள், துணை வட்டாட்சியர் அந்தஸ்தில் 71 செயல்துறை நடுவர்கள் வருவாய்த்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்னர். பிரச்சனைக்குரியவர்களாக கண்டறியப்பட்ட 350 பேர் மீது பிரிவு 107, 110 சட்ட விதிகளின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு கலெக்டர் அனுமதி பெற்று வருவோர் மாவட்ட நிர்வாகம், போலீசாரின் வேண்டுகோள்படி சட்டம், ஒழுங்கை பேணி காக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News