செய்திகள்
சென்னை, புறநகரில் மழை

சென்னை, புறநகரில் மழை - நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

Published On 2019-08-19 09:48 GMT   |   Update On 2019-08-19 09:48 GMT
சென்னை, புறநகரில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏற்கனவே 5 அடி வரை உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம், மேலும் 2 அடி அதிகரித்துள்ளது.
சென்னை:

கடந்த 2 வருடமாக பருவமழை முறையாக பெய்யாததால் ஏரி, குளங்கள் வறண்டன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்டு போனது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் ஆழ்துளை கிணறுகள் வற்றி போயின. 500 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு போட்டால் கூட தண்ணீர் கிடைக்கவில்லை.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால் மக்கள் குடிநீருக்காக தினமும் அலையும் நிலை ஏற்பட்டது. குடிநீர் வாரியம் மூலம் லாரிகளில் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் தண்ணீர் பிரச்சினை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை தனியார் லாரிகள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கல் குவாரி, நெய்வேலி தண்ணீர், விவசாய கிணறுகள் மூலமும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்யாவிட்டாலும் விட்டுவிட்டு பெய்து வரும் இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 5 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. 2 நாட்களாக பெய்த மழையால் மேலும் நிலத்தடி நீர் மட்டம் 2 அடி அதிகரித்துள்ளது.

இந்த மழையால் சென்னையில் உள்ள தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தன. மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் லேசான மழை பெய்தாலும் இடைவெளி விட்டு நின்று பெய்ததால் மழை பூமிக்குள் சென்றது.

இதனால் வறண்டு கிடந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளில் இப்போது தண்ணீர் பெருகி இருப்பதால் குடிநீர் பிரச்சினையில் இருந்து சென்னை மக்கள் தற்காலிகமாக விடுபட்டு இருக்கிறார்கள். போதுமான மழை நீர் நிலத்திற்கு கிடைத்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சினை நிரந்தரமாக தீர மழை நீர் சேகரிப்பு மையம் அவசியம் என்பதை இப்போது மக்கள் உணர தொடங்கி விட்டனர். வீடுகளில் மழை நீரை சேமிக்கும் ஆர்வம் வந்துள்ளது.

இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குடிநீர் தேவை குறைந்துள்ளது. குடிநீர் கேட்டு முன்பதிவு செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பணம் செலுத்தி குடிநீர் கேட்டு தினமும் 4000 லாரிகள் பதிவு செய்யப்பட்டு வந்ததாகவும் தற்போது அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைந்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News