செய்திகள்
காங்கிரஸ்

தேர்தல் பிரசாரம்- புதுவையை புறக்கணித்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள்

Published On 2021-04-01 05:19 GMT   |   Update On 2021-04-01 05:19 GMT
காங்கிரஸ் கட்சியில் மேலிட தலைவர்கள் யாரும் தேர்தல் பிரசாரத்திற்கு வராதது புதுவை காங்கிரசார் இடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை சட்டசபைக்கு வருகிற 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மேலிட தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் 25-ந் தேதி புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்தார். அரசு விழாவில் பங்கேற்ற அவர் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசினார்.

2-வது முறையாக மோடி நேற்று முன்தினம் (30-ந் தேதி) புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்டார். புதுவை- கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஜனவரி 31-ந் தேதி புதுவையில் பிரசாரம் செய்தார். ஏ.எப்.டி. மில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

கடந்த 26-ந் தேதி புதுவையில் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். பின்னர் அவர் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

கடந்த மாதம் 30-ந் தேதி மத்திய மந்திரி நிதின் கட்காரி காரைக்காலில் பிரசாரம் மேற்கொண்டார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிப்ரவரி 25-ந் தேதி காரைக்காலில் பிரசாரம் செய்தார். இன்று (வியாழக்கிழமை) அவர் புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

புதுவை கிழக்கு கடற்கரை சாலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையில் இருந்து சிவாஜி சிலை வரை அவர் பேரணியாக சென்று பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

மேலிட தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் (3-ந் தேதி) புதுவையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் மேலிட தலைவர்கள் யாரும் புதுவைக்கு பிரசாரம் செய்ய வரவில்லை. காங்கிரஸ் புதுவை பொறுப்பாளர்களான சஞ்சய் தத், குண்டுராவ் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே புதுவையில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு முன் பிப்ரவரி 17-ந் தேதி புதுவையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. புதுவையில் பிரசாரம் செய்தார்.

அவர் மீனவர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஏ.எப்.டி. மில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

ராகுல் காந்தி மீண்டும் புதுவைக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அவர் பிரசாரம் செய்வது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் பிரியங்கா காந்தியும் புதுவையில் பிரசாரம் செய்வார் என காங்கிரசார் நினைத்து இருந்தனர். வருகிற 3-ந் தேதி அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் புதுவைக்கு பிரசாரத்திற்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராகுல், பிரியங்கா மற்றும் மேலிட தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வராதது புதுவை காங்கிரசார் இடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News