செய்திகள்
ஜோளியை போலீசார் கோர்ட்டிற்கு அழைத்து வந்தபோது எடுத்த படம்

ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை - கைதான பெண்ணுக்கு மேலும் 2 நாள் காவல் நீட்டிப்பு

Published On 2019-10-17 10:09 GMT   |   Update On 2019-10-17 10:09 GMT
ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை செய்த வழக்கில் கைதான பெண்ணுக்கு மேலும் 2 நாள் மட்டும் காவல் நீட்டிப்பு வழங்கி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கூடத்தாயியைச் சேர்ந்தவர் ராய்தாமஸ்.

ராய் தாமசின் மனைவி ஜோளி. இவர், ராய்தாமசையும், அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் 6 பேரை சயனைடு வி‌ஷம் கொடுத்து கொலை செய்தார்.

இது தொடர்பாக ராய்தாமசின் சகோதரர் ரோஜோ தாமஸ் அளித்த புகாரின்பேரில் ஜோளி கைது செய்யப்பட்டார். ஜோளிக்கு சயனைடு வி‌ஷம் வாங்கி கொடுத்த நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் மற்றும் மேத்யூ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான ஜோளி, நகைக்கடை ஊழியர் பிரஜி குமார், மேத்யூ ஆகியோரை போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். கொலை நடந்த வீட்டிற்கு ஜோளியை போலீசார் அழைத்துச் சென்று சாட்சியங்களை சேகரித்தனர்.

மேலும், ஜோளிக்கு நெருக்கமானவர்கள், அக்கம் பக்கத்தினர் ஆகியோரையும் போலீசார் நேரில் விசாரித்து சாட்சியங்களை சேகரித்தனர். ஜோளியின் வீட்டில் மறைத்து வைத்திருந்த சயனைடு பாட்டிலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜோளியின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து போலீசார் அவரை தாமரச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ஜோளியிடம் மேலும் சில முக்கிய விபரங்களை கேட்க வேண்டியது இருப்பதாகவும், அவருக்கு சயனைடு கிடைத்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்பதால் மேலும் 3 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டுமென்று மனு கொடுத்தனர்.

இதற்கு மேலும் 2 நாள் மட்டும் காவல் நீட்டிப்பு வழங்கி கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து ஜோளியை போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே ஜோளி மற்றும் பிரஜிகுமார், மேத்யூ ஆகியோரின் வக்கீல்கள் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனுவை வருகிற 19-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும் கோர்ட்டுக்கு வந்திருந்த மேத்யூவின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை கோர்ட்டு வளாகத்தில் 10 நிமிடம் சந்தித்து பேசவும் நீதிபதி அனுமதி வழங்கினார்.

Tags:    

Similar News