ஆன்மிகம்
பிரளயம் காத்த விநாயகருக்கு அபிஷேகம்

பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய, விடிய அபிஷேகம்

Published On 2020-08-24 09:16 GMT   |   Update On 2020-08-24 09:16 GMT
தஞ்சை மாவட்டம் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் சாட்சிநாதர் கோவில் உள்ளது. இங்கு சிவன் சாட்சிநாதராக, கரும்படு சொல்லியம்மையுடன் அருள்பாலித்து வருகிறார். மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோவிலில் விநாயகர், பிரளயம் காத்த விநாயகராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கிருதயுக முடிவில் பிரளயம் ஏற்பட்டபோது சிவபெருமானின் ஆணையின்படி விநாயகர் பிரளயத்தை அடக்கினார்.

பிரளயத்தை அடக்கிய விநாயகரை வருண பகவான் கடலில் கிடைக்கும் நத்தாங்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்தார். இவரே பிரளயம் காத்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். கடலில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விநாயகருக்கு தேனால் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த அபிஷேகமும் ஆண்டுக்கு ஒரு முறை விநாயகர் சதுர்த்தி அன்று இரவு விடிய, விடிய நடைபெறும்.

இதில் தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேன் அபிஷேகத்தை பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி விநாயகர் சதுர்த்தியான நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பிரளயம் காத்த விநாயகருக்கு தேன் அபிஷேகம் நடந்தது. 
Tags:    

Similar News