ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

திருப்பரங்குன்றம் கோவிலில் கோலாகலமாக நடந்த முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்

Published On 2021-04-01 07:45 GMT   |   Update On 2021-04-01 07:45 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க அட்சதை தூவி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முருகப்பெருமான்- தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு தங்கம், பவளம், வைடூரியத்திலான நகை அணிகலன்களாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும் மணக்கோல அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெரு வழியே பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு சென்றார். இதே வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் புறப்பட்டு திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்திற்கு வந்தனர். வழி நெடுகிலும் உள்ள பல்வேறு மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதற்கிடையில் கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்றது. விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்த மண மேடையான ஆறுகால் மண்டபத்தில் 11.05 மணிக்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து 11.10 மணிக்கு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், 11.15 மணிக்கு மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். முருகப்பெருமானின் பிரதிநிதியும், தெய்வானையின் பிரதிநிதியுமாக இருந்த பட்டர்கள் ஒருவருக்கொருவர் பூமாலை மற்றும் வஸ்திரங்கள் மாற்றிக் கொண்டனர்.

நாதசுவரம் ஒலிக்க, கெட்டி மேளம் முழங்க பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கி அட்சதை தூவ, மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் அருள் பார்வையில் பகல் 11.45 மணிக்கு முருகப்பெருமான் தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடந்தது.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்த அடுத்த நிமிடமே பெண்கள் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர். ஏராளமான பக்தர்கள் மொய் எழுதினர். இரவு 7 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகே பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று காலை மகா தேரோட்டம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News