செய்திகள்
கைது

ரெயில்வே இ-தட்கல் முன்பதிவில் முறைகேடு - என்ஜினீயர் கைது

Published On 2020-10-25 00:40 GMT   |   Update On 2020-10-25 00:48 GMT
ரெயில்வேயில் இ-தட்கல் முன்பதிவில் செல்போன் செயலி மூலமாக முறைகேட்டில் ஈடுபட்ட சாப்ட்வேர் என்ஜினீயரை திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

தெற்கு ரெயில்வேயில் இ-தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது முறைகேடான செல்போன் செயலி மூலமாக முன் பதிவு செய்யப்படுவதாக சென்னை ரெயில்வே பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சைபர் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் செல்போனில் பிளேஸ்டோரில் ‘சூப்பர் தட்கல்‘ ‘சூப்பர் தட்கல் ப்ரோ‘ என்ற செல்போன் செயலிகள் மூலமாக அதிக அளவு இ-தட்கல் முறையில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அந்த செயலியை உருவாக்கியவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பொத்தியபாளையத்தை சேர்ந்த யுவராஜா (வயது 32) என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில் அதிகாரிகள் யுவராஜை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் யுவராஜா பெங்களூரூவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்ததும், தற்போது காங்கேயத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் பட்டப்படிப்பும், கோரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் பட்டமேற்படிப்பும் படித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுவரை ‘சூப்பர் தட்கல்‘, ‘சூப்பர் தட்கல் ப்ரோ‘ என்ற இரு செல்போன் செயலி மூலமாக ரூ.20 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த இரு செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக இ-தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். யுவராஜா உருவாக்கிய இந்த இரு செயலிகள் மூலமாக பயணிகள் இ-தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் போது விரைவில் ரெயில்வேயின் இணைய தளத்தில் இணைந்து தட்கல் டிக்கெட் முன்பதிவு கிடைக்கும் வகையில் செயலியை உருவாக்கி இருந்தது தெரியவந்தது.

பயணிகளுக்கு இந்த செயலிகள் மூலமாக விரைவில் இ-தட்கல் டிக்கெட் உறுதியாக கிடைத்ததால் அதிகம் பேர் இந்த செயலிகள் மூலமாக முன் பதிவு செய்துள்ளனர். இதில் ரெயில்வேக்கு சேர வேண்டிய பணம் முழுமையாக ரெயில்வேவுக்கு கிடைத்துள்ளது. ஆனால் அதில் பதிவு கட்டணத்தில் குறிப்பிட்ட தொகையை யுவராஜாவின் வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ளது. இந்த இரு செயலிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் முறைகேடாக செயல்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரு செயலிகளையும் போலீசார் முடக்கினார்கள்.

யுவராஜாவிடம் இருந்து ஒரு செல்போன், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் செயலி மூலமாக டிக்கெட் முன்பதிவில் சாப்ட்வேர் என்ஜினீயர் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News