செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Published On 2020-11-21 07:37 GMT   |   Update On 2020-11-21 07:37 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடக்கிறது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2021 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியின் கீழ் வருகிற 15.12.2020 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கு விரும்பும் வாக்காளர்கள் படிவம் 6-லும், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-லும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ஏ-விலும், பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகிய பதிவுகளில் திருத்தம் ஆகியவைகளுக்கு படிவம் 8-லும், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே வாக்காளர்களின் வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8ஏ-விலும் கோரிக்கை மனுக்களை சப்-கலெக்டர், கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கொடுத்துக்கொள்ளலாம்.

மேலும் வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,957 வாக்குச்சாவடி மையங்களில் இன்று (சனிக்கிழமையும்), நாளை (ஞாயிற்றுக்கிழமையும்) மற்றும் அடுத்த மாதம் (டிசம்பர்) 12, 13-ந் தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் வாக்குச்சாவடியில் பணியில் இருக்கும் வாக்குச்சாவடி அமைவிட நியமன அலுவலரிடம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை வாக்காளர்கள் கொடுக்கலாம். மேலும் படிவம் 6-ல் பெயர் சேர்த்தலுக்கான படிவத்துடன் வயதிற்கான ஆதாரமாக பிறப்புச்சான்று அல்லது கல்லூரி, பள்ளி மாற்றுச்சான்றிதழ், இருப்பிடத்திற்கு ஆதாரமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடத்தை குறிக்கும் முகவரி உள்ள ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் நகல் இவைகளின் ஏதேனும் ஒரு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளமான https://www.nvsp.in/ என்ற முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையத்தை 1950 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News