செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

கிசான் திட்ட முறைகேடு... உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளின் அடுக்கடுக்கான கேள்விகள்

Published On 2020-10-07 09:46 GMT   |   Update On 2020-10-07 11:15 GMT
கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மதுரை:

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் தமிழகத்தில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தனிநபா்கள் நிதியை பெறும் வகையில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் பெற்ற பலரிடம் இருந்து பல கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த  சிவபெருமாள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். 

இதுதொடர்பாக மத்திய, மாநில வேளாண் துறை செயலர்கள், டிஜிபி ஆகியோர் அக்டோபர் 15க்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

“அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிகள் சுரண்டப்படுவது ஆரோக்கியமான அடையாளம் அல்ல. ஒட்டிய வயிறுடன் உழைக்கும் விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. உரங்கள், வேலையாட்கள் கூலியை கருதாமல் குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது வருத்தம் அளிக்கிறது” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News