செய்திகள்
மயங்க் அகர்வால், ஷுப்மான் கில்

தொடக்க வீரர் யார்?: மயங்க் அகர்வால்- ஷுப்மான் கில் இடையே கடும் போட்டி

Published On 2020-11-22 15:39 GMT   |   Update On 2020-11-22 15:39 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்க ஷுப்மான் கில்- மயங்க் அகர்வால் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

கர்நாடகத்தைச் சேர்ந்த மயங்க் அகர்வால் டெஸ்ட் அணியின் தொடக்க வீரராகவே கருதப்பட்டார். ஆனால் ஐபிஎல் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

ரோகித் சர்மா காயத்தால் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். இதனால் தவான் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் உள்ளனர். இருவரும் அறிமுகமான சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. என்றாலும் ஐபிஎல் தொடரில் ஷுப்மான் கில் 440 ரன்களும், மயங்க் அகர்வால் 418 ரன்களும் விளாசி திறமையை நிரூபித்துள்ளனர். இதனால் யாரை தொடக்க வீரராக களம் இறக்குவது என்பதில் அணி நிர்வாகத்திற்கு சற்று நெருக்கடி உருவாகியுள்ளது.

இருந்தாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டுவிட்டர் பக்கத்தில் ஷுப்மான் கில் உடன் உரையாடும் படத்தை வெளியிட்டு ‘‘சிறந்த போட்டி குறித்த சிறந்த உரையாடலை எதுவும் வெல்ல இயலா’’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஷுப்மான் கில் முன்னிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது. இதில் இந்தியா 0-3 எனத் தொடரை இழந்தது.
Tags:    

Similar News