செய்திகள்
வெங்காயம்

மதுரையில் வடிவேலு பட பாணியில் வெங்காயம் திருடியவர் கைது

Published On 2019-12-08 14:53 GMT   |   Update On 2019-12-08 14:53 GMT
நடிகர் வடிவேலு பட பாணியில் வெங்காயம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை கோமதிபுரத்தில் உள்ள மளிகை கடையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் பலசரக்கு வாங்க சென்றார். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு கடையில் இருந்த 2 கிலோ வெங்காயத்தை நைசாக எடுத்து பையில் நிரப்பி கொண்டார்.

அதன் பிறகு கடையில் இருந்த ஊழியரிடம் ‘உங்கள் முதலாளியிடம் அரிசி வாங்க ரூ.1500 முன்பணம் கொடுத்து உள்ளேன். எங்களுக்கு இப்போது அரிசி தேவை இல்லை, எனவே நான் கொடுத்து உள்ள முன் பணத்தை திருப்பி தாருங்கள்’ என்று கேட்டார். அப்போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே கடை ஊழியர் முதலாளியிடம் பேசிவிட்டு ரூ.1500 கொடுத்து உள்ளார். இதனை பெற்று கொண்டு அந்த நபர் புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடைக்கு வந்த முதலாளியிடம் ஊழியர் ரூ.1500 ரூபாய் கொடுத்தது பற்றி கூறி உள்ளார். இதனை கேட்ட முதலாளி, ‘யார் அவர்?’ என்று அறிவதற்காக, கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து உள்ளார்.

அப்போதுதான் அந்த நபர் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த வெங்காயம் முதல் தின்பண்டம் வரை பல்வேறு பொருட்களை திருடியது தெரிய வந்தது.

சினிமாவில் நடிகர் வடிவேலு கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து எடை கற்கள் மற்றும் தராசை திருடிக் கொண்டு ஓடி விடுவார். அதே பாணியில் மர்ம நபர் மளிகை கடையில் பலசரக்கு பொருட்களை திருடிவிட்டு 1500 ரூபாய் பணத்தையும் மோசடி செய்துவிட்டு சென்று உள்ளார்.

இதையடுத்து கடை முதலாளி அந்த நபரை கையும் களவுமாக பிடிக்க விரும்பினார். அதே நபர் நேற்று மாலை 6 மணி அளவில் மீண்டும் அந்த கடைக்கு வந்தார். அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணை நடத்தியதில் அவர் மதுரை கோமதிபுரம் கொன்றை வீதியைச்சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 51)என்பது தெரியவந்தது.

அப்துல் ரகுமான் அந்த மளிகை கடைக்கு வந்த நாட்களில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அவர் சில மாதங்களாக பிஸ்கட் முதல் பாஸ்மதி அரிசி பாக்கெட் வரை மதிய உணவு நேரத்தில் பையில் திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அண்ணாநகர் போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News