உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சோளப்பயிர் அறுவடை பணிகள் தீவிரம்

Published On 2022-01-11 06:03 GMT   |   Update On 2022-01-11 06:03 GMT
நடப்பு சீசனில் மக்காச்சோள தட்டுக்கு போதிய விலை கிடைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதிகளில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நடவு செய்யப்பட்ட மக்காச்சோளம் சாகுபடியில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. 

தொடர் மழை காரணமாக குறித்த நேரத்தில், அறுவடை செய்ய முடியவில்லை. எனவே தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கால்நடைகளின் உலர் தீவன தேவைக்காக மக்காச்சோள தட்டு இருப்பு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில்:

மக்காச்சோள பயிர்களில், கதிர்கள் முற்றிய பிறகும் மழை காரணமாக அறுவடை தாமதமாகி சில பகுதிகளில் மக்காச்சோள தட்டு தரம் பாதித்துள்ளது.

இருப்பினும் உலர் தீவன தேவைக்காக தட்டு இருப்பு வைக்கிறோம். நடப்பு சீசனில் மக்காச்சோள தட்டுக்கு போதிய விலை கிடைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பிற பகுதி வியாபாரிகளும் இதுவரை கொள்முதலுக்கு வரவில்லை என்றனர்.

மேலும் திருப்பூர் சுற்றுப்பகுதியில் மானாவாரி சோளப்பயிர் அறுவடை பணி துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பாசன பகுதிகள் நீங்கலாக பெரும்பாலான பகுதிகளில் மானாவாரி சாகுபடி அதிகம் நடக்கிறது.

குறிப்பாக கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் தீவன பயிராக பயன்படும் சோளம் அதிக அளவு பயிரிடப்படுகிறது. கால்நடை வளர்க்காத விவசாயிகளும் சோளப்பயிர் சாகுபடி செய்து மொத்தமாக விற்பனை செய்கின்றனர். 

கால்நடை வளர்க்கும் மக்கள் தீவன பயிரை வாங்கி பத்திரப்படுத்தி வைத்து ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு பயன்படுத்துகின்றனர். மானாவாரி சாகுபடியின் போது சோளப்பயிருடன், தட்டை, பச்சைப்பயறு, கொள்ளு பயிர் செய்வது வெகுவாக குறைந்துவிட்டது. சோளப்பயிர் மட்டும் மானாவாரி சாகுபடியாக பயிரிடப்படுகிறது.

இந்தாண்டு வடகிழக்கு பருவம் துவங்கியதும் சோளம் விதைக்கப்பட்டது. எதிர்பாராத அளவுக்கு சீரான இடைவெளியில் கனமழை பெய்ததால் சோளப்பயிர் நன்கு விளைந்துள்ளது. தை-மாசியில் சோளப்பயிர் அறுவடை துவங்குவது வழக்கம்.

தென்மேற்கு பருவ மழையை பயன்படுத்தி பயிர் செய்த விவசாயிகள் முன்கூட்டியே அறுவடையை துவக்கியுள்ளனர். கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவோர், சோளக்கதிர் உள்ள கட்டுகளையே வாங்குவதால் கதிர் முற்றும் முன்னதாகவே அறுவடையை துவக்கி விட்டனர்.

பெரும்பாலான விவசாயிகள் சோளக்கதிர் முற்றும் வரை பொறுத்திருந்து சில வாரங்கள் கழித்து அறுவடை செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சோளப்பயிர் நன்கு விளைந்துள்ள நிலையில் அறுவடையை துவங்கிவிட்டோம். 

ஆட்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதால் ஆள் கிடைக்கும் போதே அறுவடையை துவக்கிவிட்டோம். வெயிலில் நன்கு காயவைத்து பக்குவப்படுத்தி தட்டுப்போர் அமைக்கப்படும். கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் தீவனமாக பயன்படுத்துவதால் சோளத்தட்டு அறுவடை துவங்கிவிட்டது என்றனர்.
Tags:    

Similar News