செய்திகள்
பாட்னாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த ரெயில் மறியல்

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் விவசாயிகள் போராட்டம்

Published On 2021-02-18 07:09 GMT   |   Update On 2021-02-18 07:09 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

அதேசமயம் நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

மறியல் போராட்டத்திற்கு வரும் விவசாயிகளை தடுப்பதற்காக முக்கிய ரெயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டிருந்தன.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள 4 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், விவசாயிகள் திட்டமிட்டபடி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். ஆனால், ரெயில் நிலையங்களில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ரெயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பாட்னா ரெயில் நிலையத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜன அதிகாரம் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News